கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 2026 சீசனுக்காக தயாராகி வருகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானுமான எம்.எஸ். தோனி 2026 ஐபிஎல் தொடரிலும் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், சம்பள விஷயத்தில் ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. Uncapped Player என்ற விதிமுறையின் கீழ் தக்கவைக்கப்பட்டுள்ளதால், தோனியின் சம்பளம் இம்முறையும் ரூ. 4 கோடியாகவே தொடர்கிறது. ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக திகழ்ந்த தோனி, தற்போது அணியின் நலன் கருதி குறைந்த ஊதியத்தில் விளையாட சம்மதித்துள்ளார். இது அவரின் சுயநலமற்ற தன்மையை காட்டுகிறது. 2026 சீசனில் தோனியை விட அதிக சம்பளம் பெறப்போகும் 8 சிஎஸ்கே வீரர்கள் உள்ளனர்.
Add Zee News as a Preferred Source

தோனியை முந்திய 8 வீரர்கள்
சஞ்சு சாம்சன் (Sanju Samson) – ரூ. 18 கோடி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து டிரேட் மூலம் சென்னைக்கு வந்துள்ள சஞ்சு சாம்சன், அணியின் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) – ரூ. 18 கோடி: தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் சஞ்சு சாம்சனுடன் இணைந்து முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார். இவர் 2019 முதல் சிஎஸ்கே அணியின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறார்.
பிரசாந்த் வீர் (Prashant Veer) – ரூ. 14.20 கோடி: சமீபத்தில் நடந்த மினி ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூ. 14.20 கோடிக்கு வாங்கப்பட்ட இளம் வீரர் இவர். தோனியை விட ரூ. 10.20 கோடி அதிகம் பெறுகிறார்!
கார்த்திக் சர்மா (Kartik Sharma) – ரூ. 14.20 கோடி: மற்றொரு இளம் வீரரான இவரும் பிரசாந்த் வீருக்கு இணையான தொகையைப் பெறுகிறார்.
சிவம் துபே (Shivam Dube) – ரூ. 12 கோடி: சிக்ஸர் மன்னன் சிவம் துபே கடந்த சீசனில் தக்கவைக்கப்பட்ட அதே தொகையான ரூ. 12 கோடியைத் தொடர்ந்து பெறவுள்ளார்.
நூர் அஹ்மத் (Noor Ahmad) – ரூ. 10 கோடி: ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான இவர், கடந்த மெகா ஏலத்தில் ரூ. 10 கோடிக்கு வாங்கப்பட்டார். கடந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய ஸ்பின்னராக ஜொலித்தார்.
ராகுல் சஹார் (Rahul Chahar) – ரூ. 5.20 கோடி: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான கடும் போட்டிக்குப் பிறகு, இந்த லெக் ஸ்பின்னரைச் சென்னை அணி ரூ. 5.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
கலீல் அஹ்மத் (Khaleel Ahmed) – ரூ. 4.80 கோடி: இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அஹ்மத், தோனியை விடச் சற்று கூடுதலான சம்பளத்தைப் பெறுகிறார்.
அணியின் வியூகம்
ரவீந்திர ஜடேஜாவையும், சாம் கரனையும் ராஜஸ்தான் அணிக்கு கொடுத்துவிட்டு சஞ்சு சாம்சனை வாங்கியது சிஎஸ்கேவின் மிகப்பெரிய நகர்வு. தோனிக்கு பிறகு அணியை வழிநடத்தவும், பேட்டிங்கை வலுப்படுத்தவும் சஞ்சுவின் வருகை உதவும் என கருதப்படுகிறது. அதே சமயம், பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை செலவழித்துள்ளது, எதிர்கால அணியை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. சம்பளம் குறைவு என்றாலும், களத்தில் தோனியின் மதிப்பு விலைமதிப்பற்றது. 2026 சீசனில் இந்த இளம் வீரர்களின் பட்டாளத்துடன் இணைந்து ‘தல’ தோனி என்ன மாயம் செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
About the Author
RK Spark