கொம்புசீவி விமர்சனம்: அதே ஆக்ஷன், ஒரே ரியாக்ஷன்! மதுரை சம்பவங்களுக்கு லீவ் விடலாமே இயக்குநர்களே?!

1970-களில் வைகை அணை கட்டுவதற்காக, தேனி மாவட்டத்திலுள்ள சில கிராமங்களைக் காலி செய்து, அவற்றைக் கையகப்படுத்துகிறது அரசு. அதனால், அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால், கஞ்சா கடத்துவது உள்ளிட்ட தவறான செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள்.

வைகை அணைக்கு அருகிலிருக்கும் பகுதியில் வசிக்கிறார் ரொக்கப்புலி (சரத்குமார்). அந்த ஊரின் காட்ஃபாதர்! ஒரு கட்டத்தில், தனிமையில் நிற்கும் கொம்புசீவி பாண்டிக்கு (சண்முகப் பாண்டியன்) ரொக்கப்புலி உதவி செய்கிறார். பிறகு ரொக்கப்புலியுடனேயே வந்து இணைந்துவிடுகிறார் பாண்டி.

அதனையடுத்து இருவரும் இணைந்து பல கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். பணத்தோடு, காவல் அதிகாரிகளுடனான பகை உள்ளிட்ட பல பிரச்னைகளையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள். இந்தப் பிரச்னை ரொக்கப்புலியையும், கொம்புசீவியையும் என்ன செய்தது என்பதுதான் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் கதை.

கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review
கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review

கோபம், கெத்தான உடல்மொழி என மதுரை சம்பவக்காரராக நிமிர்ந்து நிற்கிறார் ‘கதையின் நாயகன்’ சரத்குமார். அதோடு ஆக்ஷன் களத்தில் துள்ளல் குறையாத புத்துணர்ச்சி, சீரியஸ் முகபாவனையை வைத்துக் கொண்டு செய்யும் நையாண்டிகள் எனக் கலகலப்புக்கும் கரம் தந்திருக்கிறார்! ஆனால், வெள்ளை தாடி, மீசை ஒப்பனை மட்டும் செயற்கையாகத் துருத்திக் கொண்டு நிற்கின்றன. 

எதிரிகளை அடித்துப் பறக்கவிட்டு வெற்றி நடைபோடும் ஆக்ஷன் அவதாரத்திலும், கோப ரியாக்ஷன்களை வெளிப்படுத்தும் இடங்களில் மட்டும் கச்சிதம் காட்டி கைதட்டல்களை வாங்கிக் கொள்கிறார் சண்முகப் பாண்டியன் விஜயகாந்த்.

இருப்பினும், ஓரிரு இடங்களில் எட்டிப் பார்க்கும் மிகை நடிப்பைச் சீவியிருக்கலாம்! அதுபோல, மதுரை வட்டார வழக்கு உச்சரிப்பில் முழுமையைக் கடைப்பிடிக்காதது ஏனோ?!

காவல் அதிகாரியாக கதாபாத்திரத்திற்குத் தேர்ந்த நடிப்பைக் கொடுக்காமல் தட்டுத் தடுமாறி பாஸ் மார்க் வாங்குகிறார் நாயகி தர்ணிகா. டெம்ப்ளேட் காமெடி கதாபாத்திரங்களுக்கான விஷயங்கள் அடங்கியிருந்தாலும் அதனைச் சுவாரஸ்யமாக்கிக் கலகல எபிசோடுக்கு ஸ்டீயரிங்கை திருப்பியிருக்கிறார் கல்கி ராஜா.

கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review
கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review

இவர்களுடன், ஓரிரு காமெடிகளை மட்டும் செய்துவிட்டுப் போகும் காளி வெங்கட், மரியம் ஜார்ஜ், தருண் கோபி போன்றோருக்கு நடிப்பில் பெரிய வேலையில்லை.

மலைகளையும் வெக்கை படிந்த நிலங்களையும் படம்பிடித்த விதம், வைகை அணையை ஒட்டிய பகுதிகளைக் காட்சிப்படுத்தக் கையாண்டிருக்கும் ஒளியமைப்பு என ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் படத்திற்குக் கூர்மை தீட்டியிருக்கிறார். ஆனால், பீரியட் காலகட்டத்திற்கான கலை இயக்கப் பணிகளில் எதார்த்தம் இல்லாதது மைனஸ்!

அதுவே, கதை எந்தக் காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்கிற குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. படத்தின் நீளத்தில் கருணை காட்டத்தவறியிருக்கிறார் படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், பாடல்களில் உயிர் இல்லை! பின்னணி இசையில் இடைவேளை காட்சியில் மட்டும் ஃபயர் மோடுக்குச் சென்றிருக்கும் யுவன், மற்ற இடங்களில் தன் மேஜிக்கை நிகழ்த்தாதது ஏமாற்றமே!

கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review
கொம்புசீவி விமர்சனம் | Kombu seevi Review

காமெடி, ஆக்ஷன் எனத் தனக்குப் பழக்கமான டிராக்கில் வண்டியை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.

முதற்பாதியில் ஆங்காங்கே வரும் சில காமெடிகள் மட்டும் படத்தின் சிரிப்பின் வால்யூமைக் கொஞ்சம் கூட்டுகின்றன. குறிப்பாக, லாரி சீன் எபிசோடு நல்ல ‘ஹா ஹா’ மெட்டீரியல் பாஸ்! ஆனால், பெரும்பாலான இடங்களில் காலாவதியான காமெடி வசனங்கள் நம் பொறுமைக்கும் சவால் விடுகின்றன.

அதோடு, ‘நாங்களும் பெரிய சம்பவக்காரய்ங்கதான்’ எனக் காதல் போர்ஷனும் திரைக்கதையில் தொற்றிக் கொண்டு நம்மைச் சோதிக்கின்றன.

கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review
கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review

வரலாற்றினை மையப்படுத்திய கதை என்றாலும், ட்ரெண்டிங்கான காமெடி காட்சிகளையும், புதுமைகளையும் திரைக்கதையில் சேர்த்துச் சீவியிருந்தால் இந்த ‘கொம்புசீவி’ திமிறி எழுந்திருப்பான்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.