Doctor Vikatan: என் வயது 50. குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே மூட்டுவலியால் பெரும் அவதிக்குள்ளாகிறேன். என்னால் இயல்பாக எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை. குளிர்காலத்தில் இப்படி வலி அதிகரிக்க என்ன காரணம்… இதைத் தவிர்க்கவும், வலி அதிகமாகும்போது சமாளிக்கவும் என்னதான் செய்வது?
பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகரிப்பது என்பது உண்மையா அல்லது வெறும் மனப்பிரமையா என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், குளிர்காலத்தில் ஏற்படுகிற மூட்டுவலி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதுதான்.
நம் மூட்டுகள் சுலபமாக அசைவதற்கு அவற்றுக்கிடையே ‘சயனோவியல் திரவம்’ (Synovial Fluid) என்ற ஒரு திரவம் உள்ளது. இது எலும்புகளுக்கு இடையே ஒரு குஷன் (Cushion) போலச் செயல்படுகிறது. குளிர் காலத்தில் இந்தத் திரவத்தின் அடர்த்தி (Viscosity) அதிகரிப்பதால், மூட்டுகளை அசைக்கும்போது உராய்வு (Friction) அதிகமாகி வலி ஏற்படுகிறது.
மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகள், எலாஸ்டிக் போலச் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை. குளிர் காலத்தில் இந்த நெகிழ்வுத்தன்மை (Elasticity) குறைவதால், ஏற்கெனவே வலியுடன் இருக்கும் மூட்டுகளில் இறுக்கம் (Stiffness) உண்டாகிறது.

குளிர்ச்சியான சூழலில் நம் உடலில் வலியை உணர்த்தும் நரம்பு முனைகள் (Nerve endings) அதிக உணர்திறன் (Sensitive) கொண்டவையாக மாறுகின்றன. இதனால் சிறிய வலி கூட மிகப் பெரிய வலியாக உணரப்படுகிறது.
குளிர் காலத்தில் நம் உடலில் கை மற்றும் கால் விரல் நுனிகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. ரத்த ஓட்டம் குறைவதால் தசைகளுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. மேலும், அங்கு சேரும் மெட்டபாலிக் கழிவுகள் வெளியேற தாமதமாவதும் வலி அதிகரிக்க ஒரு காரணமாகிறது.
குளிர்காலத்தில் அனுபவிக்கும் இந்த வலியைச் சமாளிக்க, எளிமையான சில விஷயங்களைப் பின்பற்றலாம். குளிர் நேரடியாகத் தாக்காதவாறு கைகளுக்கு கிளவுஸ் அணிவது, இரவில் தூங்கும்போது கால்களுக்கு சாக்ஸ் அணிவது போன்றவை வலியைத் தடுக்க உதவும்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், மூட்டு இறுக்கத்தைக் குறைக்கவும் மூட்டுகளை அசைத்துக் கொண்டே இருப்பது மிகவும் அவசியம்.

நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் வலியைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஒரே வேளையில் நீண்ட நேரம் நடப்பதற்கு பதிலாக, காலை ஒருமுறை, மாலை ஒருமுறை எனப் பிரித்து நடப்பது அதிக பலன் தரும். ருமட்டாய்டு (Rheumatoid) போன்ற பாதிப்பு உள்ளவர்கள், குளிர் காலத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளின் அளவைச் சிறிது மாற்றியமைக்க வேண்டியிருக்கலாம். அது குறித்து மருத்துவரிடம் பேசி ஆலோசனைகள் பெறலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.