திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை – பாம்பை வைத்து அப்பாவை கொலை செய்த மகன்கள்

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அந்தப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹரன் (26) என இரண்டு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி கணேசனுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் மோகன்ராஜ் சென்னையில் தனியார் நிறுவனத்திலும், இளைய மகன் ஹரிஹரன் கார் டிரைவராகவும் வேலை செய்து வருகிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் 22- ம் தேதி நள்ளிரவு வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை கட்டுவிரியன் என்ற பாம்பு கடித்து விட்டதாக அவரின் மகன்கள் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாம்பு கடித்து ஏற்கனவே கணேசன், உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

சடலமாக கணேசன்

சந்தேகமும் விசாரணையும்!

இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில் பாம்பு கடித்து இறந்த கணேசனுக்கு அவரின் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து கணேசன், தன்னுடைய பெயரில் எடுத்து வைத்திருந்த 3 கோடி ரூபாய் இன்ஸ்சூரன்ஸ் தொகையை பெற அவரின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பித்தனர்.

அதில் சந்தேகம் அடைந்த இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் புகாரளித்தது. அதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லாவை விசாரிக்க ஐஜி அஸ்ரா கர்க் உத்தரவிட்டார். அதன்பேரில் டிஎஸ்பி ஜெயஸ்ரீ, இன்ஸ்பெக்டர்கள் தங்கதுரை, கஸ்தூரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, மாரிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார், கணேசனின், மோகன்ராஜ், அவரின் தம்பி ஹரிஹரன் ஆகியோரிடம் கணேசன் மரணம் குறித்து விசாரித்தபோது, பாம்பு கடித்து அப்பா இறந்துவிட்டதாகக் கூறினர். தொடர்ந்து கணேசனை எப்போது பாம்பு கடித்தது என இருவரிடமும் போலீஸார் விசாரித்தபோது எந்த நேரத்தில் கடித்தது என எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பார்க்கும் போது அவர் வாயில் நுரைதள்ளி மயங்கிய நிலையிலிருந்தார் என்று மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் தெரிவித்தனர். பாம்பு எப்படி வீட்டுக்குள் நுழைந்தது என கேட்டது என்று கேட்டதற்கு தெரியாது என பதிலளித்திருக்கிறார்கள். இதையடுத்து கணேசனைக் கடித்த பாம்பை கொன்று விட்டீர்களா? என போலீஸார் கேட்டனர்.

ஆமாம், அப்பாவை கடித்த பாம்பு, அதே அறையில் பதுங்கியிருந்தது. அது வேறு யாரையும் கடித்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் இருவரும் அடித்தே கொன்று விட்டோம் என கூறினர். மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் கூறிய பதிலை உண்மையென நம்புவதைப் போல போலீஸாரும் இருவரையும் விசாரித்து விட்டு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இருவரையும் ரகசியமாக தனிப்படை போலீஸார் கண்காணித்தனர். கணேசன் உயிரிழந்த தினத்தில் மோகன்ராஜ், ஹரிகரனின் நடவடிக்கை குறித்தும் அக்கம் பக்கத்தில் விசாரித்து சில தகவல்களை தனிப்படை போலீஸார் சேகரித்தனர்.

மோகன்ராஜ்

காட்டிக்கொடுத்த போன்

போலீஸாரின் இந்த புலனாய்வில் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதத்தில் பாலாஜி, பிரசாந்த், நவீன்குமார், தினகரன் ஆகியோரிடம் அடிக்கடி பேசி வந்ததும் அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததும் தெரியவந்தது. இதில் தினகரன், என்பவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்த தகவலை தெரிந்த தனிப்படை போலீஸார், அவரிடம் விசாரித்தனர்.

போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் கணேசனைக் கொலை செய்ய தினகரன்தான் கட்டுவிரியன் பாம்பை பிடித்து கொடுத்த தகவல் தெரியவந்தது. இதற்காக அவருக்கு பணம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து தினகரன் அளித்த தகவலின்படி கூலிப்படையாக செயல்பட்ட பாலாஜி, பிரசாந்த், நவீன்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து இன்ஸ்சூரன்ஸ் பணம், அரசு வேலை ஆசையில் பெற்ற அப்பாவை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த குற்றத்துக்காக மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம் “கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் அவரின தம்பி ஹரிஹரன் ஆகிய இருவருக்கும் நிரந்தர வேலை இல்லாத காரணத்தால் போதிய வருமானம் இல்லை. அதனால் இருவரும் கடன் தொல்லையால் சிக்கித் தவித்து வந்திருக்கிறார்கள். ஆடம்பரமாக வாழவும் அப்பாவை கொலை செய்து கருணை அடிப்படையில் அரசு வேலையை பெற ஆசைப்பட்ட மோகன்ராஜ், ஹரிஹரன் இருவரும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதற்காக மோகன், தான் ஏற்கெனவே சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது அவருடன் பாலாஜி என்பவரிடம் அப்பா கணேசனை கொலை செய்வது குறித்து ஆலோசித்திருக்கிறார். அப்போது பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது என பாலாஜி தெரிவித்ததோடு தன்னுடைய உறவினர் நவீன் குமார் என்பவருக்குத் தெரிந்த பாம்பு படிக்கும் தொழிலில் தொடர்புடைய பிரசாந்த், தினகரன் ஆகியோரை மோகன்ராஜிக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.

ஹரிஹரன்

இதையடுத்து இந்தக் கும்பல் மணவூர் காட்டுப்பகுதியிலிருந்து கட்டுவிரியன் பாம்பை பிடித்த தினகரன் சாக்குபையில் அடைத்து கொடுத்திருக்கிறார். அதை பொதட்டூர்பேட்டையில் உள்ள கணேசன் வீட்டுக்கு காரில் கொண்டு வந்து அவர் தூங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் கழுத்தில் போட்டிருக்கிறது இந்தக் கும்பல். அந்தப் பாம்பு கணேசனின் கழுத்தில் 3 முறை கடித்து விட்டு தப்பி செல்ல முயன்றிருக்கிறது. அதனால் பாம்பை அடித்துக் கொன்றிருக்கிறார்கள். அப்பா கணேசனை பாம்பு கடிக்கும் போது அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் மோகன்ராஜ், ஹரிஹரன். கணேசன் உடலில் பாம்பின் விஷம் ஏறி அவர் உயிரிழக்கும் வரை மகன்களும் கூலிப்படையைச் சேர்ந்தவர்களும் காத்திருக்கிறார்கள்” என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “கணேசனைக் கொலை செய்யும் சதி திட்டத்தில் முதல்கட்டமாக அண்ணன், தம்பி இருவரும் கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் நாகபாம்பை வைத்து கடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால் பாம்பு கடித்தும் நல்ல வேளையாக கணேசன் உயிர்பிழைத்து விட்டார். அதனால் இரண்டாவது தடவை கொடிய விஷம் கொண்ட பாம்பான கட்டுவிரியனை கொண்டு வந்து கடிக்க வைத்து கணேசனை தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள். இந்த வழக்கில் இன்னும் சில ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். அதனால் புலனாய்வு குறித்த முழு தகவலை வெளியில் சொல்ல முடியாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.