ஊட்டி: யானை – மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI; "புதிய மைல்கல்" – வனத்துறை நம்பிக்கை

இந்திய அளவில் யானை – மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருப்பது வேதனையான உண்மை.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது பெரும்பாலான மழைக்காடுகள் அழிக்கப்பட்டு பணப்பயிர்களான தேயிலை, காபி தோட்டங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டதில் தொடங்கி தற்போதைய வளர்ச்சிப் பணிகள் வரை யானைகளின் வாழிடங்களையும் வழித்தடங்களையும் கடுமையான சிதைவுக்கு உள்ளாக்கி வருகின்றன.

ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு
ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு

இதன் துயர்விளைவுகளை அப்பாவி யானைகளும் விளிம்பு நிலையில் இருக்கும் பழங்குடிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களும் எதிர்கொண்டு வருகின்றனர்.

உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு இடம்பெயர முடியாமல் யானைகள் போராடி வருகின்றன.

ஊருக்குள் நுழையும் யானைகளைக் காட்டுக்குள் விரட்டுகிறோம் என வனத்துறை மேற்கொண்டு வரும் பழங்கால கும்கி யானைகள் யுக்தி முதல் நவீன நைட் விஷன் தெர்மல் டிரோன் கேமராக்கள் வரை எதுவுமே பெரிய அளவில் எடுபட்டதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில்தான் யானை – மனித எதிர்கொள்ளல்களை மட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவை நாடியிருக்கிறது வனத்துறை.

ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு
ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு

நீலகிரி எம்‌.பி ஆ. ராசா, வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ உள்ளிட்டோரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட இந்தப் புதிய திட்டம் குறித்து வனத்துறையினர், “நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பில் நாடுகாணி வனச்சரகத்திற்குட்பட்ட ஜீன்பூல் மரபியல் தோட்டத்தில் உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Command-and-Control Centre) புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு
ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு

மனித- வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் 46 பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, 34 செயற்கை நுண்ணறிவு மற்றும் 12 அதிநவீன செயற்கை நுண்ணறிவு என மொத்தம் 46 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வனவிலங்கு நடமாட்டம் அதிக அளவில் உள்ள பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிப்பதால், அவற்றின் நடமாட்டம் மற்றும் மனித- எதிர்கொள்ளல்களுக்கான அபாயம் குறித்து உடனடியாக எச்சரிக்கைகள் உருவாக்கப்படும்.

இந்த எச்சரிக்கைகள் மற்றும் கட்டளைகள் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வனப்பணியாளர்களுக்கும், வனப்பகுதியினை ஒட்டியுள்ள மக்கள் வசிப்பிடங்களில் அமைக்கப்பட்டுள்ள 24 எச்சரிக்கை ஒலிபெருக்கிகள், குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்கும் உடனுக்குடன் தகவல்கள் வழங்கப்படும்.

ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு
ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு

தடையில்லா தகவல் தொடர்பிற்காக கூடலூர் வனக்கோட்டத்தில் கம்பியில்லாத் தொலைத்தொடர்பு வலையமைப்பும் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

யானை- மனித எதிர்கொள்ளல் மேலாண்மையில் இந்த செயற்கை நுண்ணறிவு மையம் புதிய மைல்கல்லாக அமையும் ” என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.