இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டி20 உலக கோப்பை அணி அறிவிப்புக்கு பிறகு, நட்சத்திர வீரர் சுப்மன் கில் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்க தயாராகிவிட்டார். எதிர்வரும் டி20 உலக கோப்பை அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட அவர், தற்போது பஞ்சாப் மாநில அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் களமிறங்குகிறார். 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முக்கிய வீரராக திகழும் சுப்மன் கில்லின் பெயர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Add Zee News as a Preferred Source

பிசிசிஐ தேர்வு
பிசிசிஐ தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான குழு, “Team Combination மற்றும் பேலன்ஸ்” ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பவர்-பிளேயில் அதிரடியாக ரன் குவிக்க தவறியதும், சமீபத்திய ஃபார்ம் குறைவும் அவர் நீக்கப்பட முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா போன்ற அதிரடி ஆட்டக்காரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஹசாரே டிராபி
இந்நிலையில், 2025-26 சீசனுக்கான விஜய் ஹசாரே டிராபி தொடரில் பங்கேற்கும் பஞ்சாப் மாநில அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுப்மன் கில் மட்டுமின்றி, டி20 உலக கோப்பைக்கு தேர்வாகியுள்ள அபிஷேக் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள 18 பேர் கொண்ட இந்த நட்சத்திரப் பட்டியலில், கேப்டனாக அபிஷேக் சர்மா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இணையும் இளமை ஜோடி
சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் சிறு வயது முதலே பஞ்சாப் அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள். U19 காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களான இவர்கள், தற்போது மீண்டும் உள்ளூர் தொடரில் ஒரே அணிக்காக களமிறங்குவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலககோப்பை அணியில் இடம்பிடித்துள்ள அபிஷேக் சர்மா, ஜனவரி 21ம் தேதி நாக்பூரில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் இணைவார். அதுவரை அவர் விஜய் ஹசாரே டிராபியில் முழுமையாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், டி20 அணியில் இடம் கிடைக்காத சுப்மன் கில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். அதற்கு முன்னதாகத் தனது ஃபார்மை நிரூபிக்க அவருக்கு இந்த விஜய் ஹசாரே தொடர் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
போட்டி அட்டவணை
விஜய் ஹசாரே டிராபி தொடர் வரும் டிசம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது. பஞ்சாப் அணி ‘குரூப் C’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இப்போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் நடைபெறும். பஞ்சாப் அணியில் இவர்களுடன் பிரப்சிம்ரன் சிங், அன்மோல்ப்ரீத் சிங், நமன் தீர் போன்ற ஐபிஎல் நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளதால், இம்முறை பஞ்சாப் அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. உலக கோப்பை அணியில் இடம்பிடிக்க தவறிய சுப்மன் கில், உள்ளூர் போட்டிகளில் தனது அதிரடியை காட்டி மீண்டும் தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
About the Author
RK Spark