`எத்தனை முனை போட்டி நடந்தாலும் திமுக-வை வீழ்த்த முடியாது!' – அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி,

“ஒத்தக் கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், டி.டி.வி தினகரனையோ, ஓ.பி.எஸ்-ஸையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரா என்பதை அவர் கொடுத்துள்ள பேட்டியிலேயே பார்த்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து அவர்களுக்குள் ஒத்தக் கருத்து இல்லை என்பது தெரிகிறது. பியூஸ் கோயல் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக வருகிறார். அவருக்கு தமிழ்நாட்டுடைய அரசியல் தட்பவெட்ப நிலை தெரியாது. அதனால், நிச்சயமாக அவர் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது. எத்தனை முனை போட்டிகள் நடந்தாலும் தி.மு.க-வை வீழ்த்த முடியாது. சாக்குப் போக்கு சொல்வதற்காக நயினார் நாகேந்திரன் இரு முனைப் போட்டி என்பதை முன்வைத்திருக்கிறார். எத்தனை முனை போட்டி வந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள இந்த ஐந்தாண்டு கால சாதனை தி.மு.க கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெற்று தரும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். தலைவர் மு.க ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆக்குவது தான் எனது கடமை, என்னுடைய பணி என்று தெளிவாக சொல்லிவிட்டார். இதிலிருந்து, முதலமைச்சருக்கான போட்டியில் உதயநிதி இல்லை, தி.மு.க தலைவரை முதலமைச்சராக ஆக்குவதற்கு தான் அவர் தேர்தல் களத்தில் மும்முரமாக பணிபுரிகிறார்.

ragupathi

எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஐயாயிரம் ரூபாய் கொடுத்து இருக்கலாம். கொடுக்காமல் இருந்திருக்கலாம். நாங்கள் தற்பொழுது இதைப் பற்றி சொல்ல மாட்டோம். என்ன என்பது ரகசியமாகத்தான் இருக்கும். திடீரென்று தான் அறிவிக்கப்படும். ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது பா.ஜ.க-வின் கொள்கை. எங்களின் கொள்கை அல்ல. திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்கா இருக்கிறது. தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா தான். அதற்கு வழிபாடு செய்ய அனுமதி கொடுப்பது தவறில்லை. திருப்பரங்குன்றம் பிரச்னையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது. முதல்முறையாக தமிழ்நாட்டில் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக, எதைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்பதற்காக பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்-ஸோடு சேர்ந்து போட்ட திட்டம். அது இன்று தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள். அவர்களுக்கு எது சரி எது தவறு என்பது தெரியும். இ ஃபைலிங் முறை என்பது விரைந்து அந்த பணியை செய்வதற்காகவும், இருந்த இடத்திலிருந்து வழக்கை ஃபைல் செய்ய முடியும் என்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது. தற்போது, அனைத்து இடத்திலேயுமே ஆன்லைன் இ-ஃபைலிங் தான் இருக்கிறது. நீதிமன்ற விசாரணை கூட காணொளி காட்சி மூலமாக நடக்கிறது. இ ஃபைலிங் முறையில் தாமதம் ஏதும் இருப்பது தெரிய வந்தால் அது கண்டறியப்பட்டு அந்த தாமதத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை அரசு செய்யும். இ ஃபைலிங் முறையை நீதிமன்றம் வழக்கறிகளுக்காக கொண்டுவந்துள்ளது. நீதிமன்றம் இ ஃபைலிங் முறையை கொண்டு வந்துள்ளதால் அதில் அரசு கருத்து சொல்ல இயலாது.

செவிலியர் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களால் எந்த நெருக்கடியும் வராது. எல்லா நெருக்கடியும் சுலபமாக தீர்க்கப்படும். நிச்சயமாக அனைவரின் ஆதரவோடு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி பார்ட் -2 தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் தொடரும். அ.தி.மு.க-வால் மெகா கூட்டணி அமைக்க முடியாது. தி.மு.க கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது. அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியினுடைய கருத்துக்கு எதிரானவர்களை நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோமே தவிர, யாரையும் நாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை. பழுத்த மரம் தான் கல்லடிப்படும். அதனால்தான், அனைவரும் தி.மு.க-வை நோக்கி வந்தால்தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும். தி.மு.க-வை சொல்லித்தான் வர முடியும் பேச முடியும். தி.மு.க எதிரி என்று சொன்னால் தான் திரும்பி பார்ப்பார்கள். அதனால்தான், தி.மு.க-வை சொல்லி வருகின்றனர்.

ragupathi

இதிலிருந்தே தி.மு.க என்பது தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தி என்பதை தெரிந்து கொள்ளலாம். நயினார் நாகேந்திரனுக்கு நாடக கம்பெனி எல்லாம் பழைய காலத்தில்தான் இருந்தது. தற்போது, வள்ளி திருமணம் நாடகம் எல்லாம் போட்டால் யாரும் போய் பார்ப்பதில்லை. அதனால், அவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. தூக்கத்திலிருந்து தற்போது தான் விழித்துள்ளார். தலைவர் பதவி கிடைத்தவுடன் தூக்கத்தில் இருந்து விழித்தவர், தான் பார்த்த வள்ளி திருமண நாடகங்களையும் மற்ற நாடகங்களையும் நினைத்துக் கொண்டு விடிய விடிய நடக்கும் என்று நினைத்து சொல்லி வருகிறார். நிச்சயமாக இது நாடக கம்பெனி அல்ல. நல்ல அறிக்கைகளையும், நல்ல திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு தருகின்ற தேர்தல் அறிக்கைக் குழுதான், தி.மு.க தேர்தல் அறிக்கை குழு” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.