இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை மீண்டும் தக்கவைத்துள்ள இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான், தனது பேட்டிங் திறமையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிரூபித்துள்ளார். விஜய் ஹசாரே டிராபியில் கர்நாடக அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், வெறும் 33 பந்துகளில் சதம் விளாசி மைதானத்தையே அதிர வைத்துள்ளார். இந்த அசுரத்தனமான இன்னிங்ஸ் மூலம், தான் ஏன் டி20 உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டேன் என்பதை அவர் நிரூபித்துள்ளார். விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் ‘பி’-யில் இன்று டிசம்பர் 24 நடைபெற்றது. இதில் ஜார்கண்ட் அணி, வலிமையான கர்நாடக அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஜார்கண்ட் அணிக்கு, கேப்டன் இஷான் கிஷான் ஒரு கனவு தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்.
Add Zee News as a Preferred Source
ISHAN KISHAN In his peak form ,
He scored back to back century in his last 2 match
in SMAT final (T20)
in Vijay Hazare Trophy(ODI) against karnataka
Today-125(39) with SR of 320.51 (4’s~7|6’s~14)#VijayHazareTrophy pic.twitter.com/QQk0qbnl9M
— Prince Jha (@PrinceJha639654) December 24, 2025
தொடக்கம் முதலே அதிரடி
தொடக்கம் முதலே கர்நாடக பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். எந்த பந்துவீச்சாளரையும் அவர் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக, மைதானத்தின் எல்லை கோட்டை தாண்டி பந்துகள் பறந்துகொண்டே இருந்தன. வெறும் 33 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்து, விஜய் ஹசாரே டிராபி வரலாற்றில் அதிவேக சதங்களில் ஒன்றை பதிவு செய்தார். மொத்தமாக 39 பந்துகளை சந்தித்த அவர், 125 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவரது இந்த மிரட்டலான இன்னிங்ஸில் 14 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். அதாவது, பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலமே 112 ரன்களை குவித்துள்ளார்.
ஜார்கண்ட் அணியின் சாதனை
இஷான் கிஷானின் இந்த ருத்ரதாண்டவத்தால் ஜார்கண்ட் அணியின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அவருக்கு துணையாக விராட் சிங் நிதானமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் ஆடி 68 பந்துகளில் 88 ரன்கள் (8 பவுண்டரி, 4 சிக்ஸர்) சேர்த்தார். குமார் குஷாக்ராவும் தனது பங்கிற்கு ரன்களை குவிக்க, 50 ஓவர்கள் முடிவில் ஜார்கண்ட் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. கர்நாடக பந்துவீச்சாளர்கள் இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறி போயினர்.
இந்திய அணியில் கம்பேக்
இஷான் கிஷானின் இந்த ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பின்னால் ஒரு பெரிய உத்வேகம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட இஷான், தனது கடின உழைப்பால் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். வரும் 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், சஞ்சு சாம்சனுடன் இணைந்து மாற்று விக்கெட் கீப்பராக அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை கொண்டாடும் விதமாகவே இன்றைய ஆட்டம் அமைந்தது. இதனால் டி20 உலக கோப்பையில் நிச்சயம் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
சையத் முஷ்டாக் அலி டிராபியில் சாதித்த வீரன்
இஷான் கிஷானின் இந்த தேர்வுக்கு அடித்தளமாக அமைந்தது சமீபத்தில் முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) தொடராகும். ஜார்கண்ட் அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், அந்த அணி முதன்முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய அவர், 10 இன்னிங்ஸ்களில் 517 ரன்களை குவித்தார். ஹரியானா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 49 பந்துகளில் 101 ரன்கள் விளாசி, தனி ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அந்த போட்டியில் அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
About the Author
RK Spark