இந்திய கிரிக்கெட் வரலாற்றையே மாற்றியமைத்த ஒரு சகாப்தம் தொடங்கிய நாள் டிசம்பர் 23. சரியாக 21 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி, மகேந்திர சிங் தோனி என்ற இளைஞர் இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கினார். வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அறிமுகமான தோனி, அப்போது யாருக்கும் பெரிதாக தெரியாத ஒரு ராஞ்சி இளைஞராக மட்டுமே இருந்தார். ஆனால், அந்த இளைஞன் பிற்காலத்தில் கிரிக்கெட் உலகின் தலையெழுத்தையே மாற்றி எழுதுவார் என்று யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.
Add Zee News as a Preferred Source

அறிமுகத்தில் சோகம்
பொதுவாக ஒரு நட்சத்திர வீரரின் அறிமுகம் என்பது அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால், தோனியின் அறிமுகம் ஒரு சோக காவியமாகவே தொடங்கியது. ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தோனி, தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் அவுட் ஆகி கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். முகமது கைஃப் உடனான ஒரு சிறிய புரிதல் இன்மையால், தோனி ஒரு ரன் கூட எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். முதல் போட்டியிலேயே இப்படி டக் அவுட் ஆவது எந்தவொரு புதுமுக வீரரின் நம்பிக்கையையும் உடைத்துவிடும். ஆனால், தோனி சாதாரண மனிதர் அல்ல என்பதை அடுத்தடுத்த போட்டிகளில் நிரூபித்தார்.
விசாகப்பட்டினத்தில் வெடித்த எரிமலை
அந்த டக் அவுட் சோகத்திற்கு பிறகு, தோனிக்கு தனது திறமையை நிரூபிக்க நீண்ட காலம் தேவைப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில், தோனி தனது விஸ்வரூபத்தை எடுத்தார். அந்த போட்டியில் 123 பந்துகளில் 148 ரன்களை குவித்து, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். நீண்ட தலைமுடி, ஹெலிகாப்டர் ஷாட் மற்றும் பயமற்ற ஆட்டம் ஆகியவை ரசிகர்களை உடனடியாக கவர்ந்தன. அந்த தருணத்திலிருந்து, அவர் வெறும் விக்கெட் கீப்பர் மட்டுமல்ல, ஒரு மேட்ச் வின்னர் என்பது உலகுக்கு தெரியவந்தது.
கேப்டன் கூல்
விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் கலக்கிய தோனிக்கு, பின்னர் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. பலர் அவரது அனுபவம் குறித்து கேள்வி எழுப்பினாலும், தோனி தனது செயல் மூலம் பதில் அளித்தார். 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி-யின் மூன்று முக்கிய கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றார். களத்தில் எவ்வளவு இக்கட்டான சூழலிலும் பதற்றப்படாமல், நிதானமாக முடிவெடுக்கும் அவரது பாணி, அவருக்கு கேப்டன் கூல் என்ற பெயையைப் பெற்று தந்தது.
ஒரு சிறிய நகரத்திலிருந்து வந்து, முதல் போட்டியில் டக் அவுட் ஆகி, பின்னர் உலகமே கொண்டாடும் ஒரு ஜாம்பவானாக தோனி உயர்ந்த கதை, தன்னம்பிக்கைக்கு ஒரு சிறந்த உதாரணமாகும். 2025ல் நின்று திரும்பி பார்க்கும்போது, அந்த சிட்டகாங் மைதானத்தில் நடந்த அந்த ரன் அவுட் ஒரு சகாப்தத்தின் தொடக்கமாகவே தெரிகிறது. ஆரம்பம் சறுக்கலாக இருந்தாலும், முடிவு சரித்திரமாக மாறிய கதை இது.
About the Author
RK Spark