இந்திய கிரிக்கெட் உலகில் தற்போது புயலைக் கிளப்பியிருக்கும் பெயர் வைபவ் சூர்யவன்ஷி. வெறும் 14 வயதே ஆன இந்த சிறுவனின் அசுரத்தனமான ஆட்டத்தை பார்த்து மிரண்டுபோன காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இவரை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சசி தரூர், வைபவை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். “கடைசியாக ஒரு 14 வயது சிறுவன் இதுபோன்று அபாரமான திறமையை வெளிப்படுத்தியபோது, அது சச்சின் டெண்டுல்கராக இருந்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது வரலாறு. நாம் எதற்காக காத்திருக்கிறோம்? வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணிக்காக விளையாட வையுங்கள்!” என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் கவுதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ ஆகியோரை டேக் செய்துள்ளார்.
Add Zee News as a Preferred Source

யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
பீகார் மாநிலத்தை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி போட்டியில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக சாதனை படைத்தார். ஆண்கள் ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக இளம் வயது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார். வெறும் 36 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது இந்திய அளவில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிவேக சதமாகும்.
ஏபி டிவில்லியர்ஸ் சாதனை முறியடிப்பு
சதம் அடித்தது மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸின் சாதனையையும் இவர் தகர்த்தெறிந்தார். டிவில்லியர்ஸ் 2015ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 64 பந்துகளில் 150 ரன்களை எட்டியிருந்தார். ஆனால் வைபவ், வெறும் 59 பந்துகளில் 150 ரன்களை கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இறுதியாக 84 பந்துகளில் 190 ரன்களைக் (16 பவுண்டரி, 15 சிக்ஸர்) குவித்து ஆட்டமிழந்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 226.19 ஆக இருந்தது.
The last time a fourteen year old showed such prodigious cricketing talent, it was Sachin Tendulkar — and we all know what became of him. What are waiting for? VaibhavSuryavanshi for India!@imAagarkar @GautamGambhir @bcci @sachin_rt https://t.co/BK9iKqBGV2
— Shashi Tharoor (@ShashiTharoor) December 24, 2025
பீகார் அணியின் இமாலய ஸ்கோர்
இந்த போட்டியில் வைபவ் மட்டுமல்லாமல், அணியின் கேப்டன் சகிபுல் கனி 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 128 ரன்களும், ஆயுஷ் லோஹருகா 56 பந்துகளில் 116 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் பீகார் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இது லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக உயர்ந்த ஸ்கோர் ஆகும். பதிலுக்கு ஆடிய அருணாச்சல பிரதேசம் 177 ரன்களுக்கு சுருண்டது. பீகார் அணி 398 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இளம் வயதிலேயே இத்தகைய முதிர்ச்சியான மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வைபவ் சூர்யவன்ஷி, எதிர்கால இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
About the Author
RK Spark