பணம் இருந்தால் மட்டும் போதாது, சரியான திட்டமிடலும் வேண்டும் என்பதை இந்த ஏலம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஏலத்தில் சொதப்பிய 5 அணிகளை பற்றி பார்ப்போம்.
Add Zee News as a Preferred Source
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் கோடிகளில் பல வீரர்கள் வாங்கப்பட்டனர். சில அணிகள் மிக திறமையாக வீரர்களை தேர்வு செய்த நிலையில், சில முக்கிய அணிகள் திட்டமிடலே இல்லாமல் பணத்தை வாரி இறைத்துள்ளன. பணம் இருந்தால் மட்டும் போதாது, சரியான திட்டமிடலும் வேண்டும் என்பதை இந்த ஏலம் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த ஏலத்தில் அதிக தொகையை செலவழித்தும், சரியான அணியை கட்டமைக்கத் தவறிய அணிகள் எவை? அவற்றின் முக்கிய தவறுகள் என்ன என்று பார்ப்போம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
ஏற்கனவே டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென் மற்றும் அபிஷேக் சர்மா என வலுவான பேட்டிங் வரிசையை வைத்திருக்கிறது ஹைதராபாத். இவர்களுக்கு தேவைப்பட்டது ஒரு தரமான வேகப்பந்து வீச்சாளரும், ஸ்பின்னரும் தான். ஆனால், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனுக்காக ரூ. 13 கோடியை வாரி இறைத்துள்ளனர். லிவிங்ஸ்டோன் முதல் சுற்றில் விற்கப்படாமல் போனவர். அவரை ஆரம்பத்திலேயே குறைந்த விலைக்கு வாங்கியிருக்கலாம். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு மாற்று வீரரை தேர்வு செய்யாமல், பேட்டிங்கில் ஏற்கனவே வலுவாக உள்ள இடத்தில் மீண்டும் பணத்தை கொட்டியது மிகப்பெரிய சறுக்கல்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)
நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி, இலங்கையின் மதிஷா பதிரானாவுக்காக ரூ. 18 கோடியை செலவிட்டுள்ளது. பதிரானா திறமையானவர் தான் என்றாலும், அவர் அடிக்கடி காயமடையக்கூடியவர் மற்றும் சீரற்ற ஃபார்மில் இருப்பவர். கேமரூன் கிரீனுக்காக ஏற்கனவே ரூ. 25 கோடி செலவழித்த நிலையில், பதிரானாவுக்காக மேலும் ரூ. 18 கோடியை செலவிட்டது அதிகப்படியான ரிஸ்க் என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் விமர்சித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே அவரை தக்கவைக்கத்தயங்கிய நிலையில், கேகேஆர் இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)
லக்னோ அணி ஜோஷ் இங்கிலிஸுக்காக ரூ. 8.60 கோடியை செலவிட்டுள்ளது. ஜோஷ் இங்கிலிஸ் ஐபிஎல் தொடரின் பெரும்பகுதியை தவறவிட வாய்ப்புள்ளது. முழு தொடருக்கும் கிடைக்காத ஒரு வீரருக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டது வீண் என்று கூறப்படுகிறது. மேலும், டேவிட் மில்லர் போன்ற சிறந்த ஃபினிஷரை தக்கவைக்காமல், அவரை டெல்லி அணிக்கு வெறும் ரூ. 2 கோடிக்கு செல்ல விட்டது லக்னோவின் மிகப்பெரிய சறுக்கலாக பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)
பொதுவாக ஏலத்தில் மிக தெளிவாக செயல்படும் சிஎஸ்கே, இம்முறை அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய இரண்டு உள்ளூர் வீரர்களுக்காக மட்டும் சுமார் ரூ. 28.40 கோடியை செலவிட்டுள்ளது. சர்வதேச அனுபவம் இல்லாத வீரர்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டது சிஎஸ்கே வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. மேலும் கேமரூன் கிரீன் போன்ற முன்னணி ஆல்-ரவுண்டர்களை வாங்கும் வாய்ப்பை அவர்கள் இழந்தனர். இது தோனியின் வியூகமா அல்லது நிர்வாகத்தின் சறுக்கலா என்பது வரும் சீசனில் தான் தெரியும்.
குஜராத் டைட்டன்ஸ் (GT)
டேவிட் மில்லர், முகமது ஷமி போன்ற மேட்ச் வின்னர்களை தக்கவைக்க தவறியது குஜராத் அணிக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும். அணியின் ஃபினிஷிங் ரோலில் முக்கிய பங்காற்றிய மில்லரை ஏலத்தில் எடுக்க தவறிவிட்டது. மில்லர் வெறும் அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார். இவ்வளவு குறைந்த விலைக்கு கிடைத்த ஒரு தங்கமான வாய்ப்பை குஜராத் நழுவவிட்டது மிகப்பெரிய ஆச்சரியம். வரும் சீசனில் இந்த தவறுகள் அணிகளின் வெற்றியை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
About the Author
RK Spark