ரோகித் டீம்மேட், கேகேஆர் பிளேயருக்கு கழுத்தில் அடி! ஐசியூவில் அனுமதி

Angkrish Raghuvanshi : ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை (2025-26) கிரிக்கெட் தொடரில், உத்தரகாண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது மும்பை அணியின் தொடக்க வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷிக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.  உத்தரகாண்ட் அணி பேட்டிங் செய்தபோது, ஆட்டத்தின் 30-வது ஓவரை தனுஷ் கோடியன் வீசினார். ஸ்டிரைக்கில் இருந்த பேட்டர் சௌரப் ராவத் அடித்த பந்தை டைவ் அடித்து பிடிக்க அங்க்ரிஷ் ரகுவன்ஷி முயற்சி செய்தார். 

Add Zee News as a Preferred Source

‘டீப் மிட்-விக்கெட்டில்’ நின்று கொண்டிருந்த அவர், ஓடி வந்து டைவ் அடித்தபோது, அவரது தலை தரையில் பலமாக மோதியது. இதில் அவருக்கு கழுத்தின் கீழ் பகுதி மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதுடன், லேசான மயக்கமும் (Concussion) ஏற்பட்டது. இதனால், மைதானமே பரபரப்பாக மாறியது. எல்லா பிளேயர்களும் ரகுவன்ஷியை சூழ, அவருக்கு என்ன ஆனது என்ற பயம் மேலோங்கியது. உடனடியாக, மைதானத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், ஸ்டிரெச்சர் மற்றும் ஆம்புலன்ஸ் வர சில நிமிடங்கள் தாமதமானது. அந்த நேரத்தில் ரகுவன்ஷி தனது கழுத்தை அசைக்க முடியாமல் மிகுந்த வலியுடன் காணப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதி

சிறிது நேரத்துக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அவர் ஜெய்ப்பூரில் உள்ள SDMH மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் அவசியமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. லேட்டஸ்ட் தகவல்களின்படி, ஸ்கேன் ரிப்போர்ட்டில் ரகுவன்ஷிக்கு பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் அணி தங்கியுள்ள ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளார். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

ரோகித் ஷர்மாவின் ஆட்டம்

இப்போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதல் பந்திலேயே கோல்டன் டக்அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். ரகுவன்ஷி 20 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், முஷீர் கான் 55 ரன்கள், சர்பராஸ் கான் 55 ரன்கள் மற்றும் ஹர்திக் தாமோர் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்தனர். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 50 ஓவர்களில் 331 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய உத்தரகாண்ட் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் மட்டுமே எடுக்க, 51 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

KKR அணிக்கு கவலை

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் முக்கிய வீரராக ரகுவன்ஷி இருந்து வருகிறார். 2026 ஐபிஎல் சீசனுக்காக அவர் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஏற்பட்ட இந்த காயம் ரசிகர்கள் மற்றும் கேகேஆர் நிர்வாகத்தினர் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தியது. இருப்பினும், அவர் தற்போது நலமாக இருப்பதாக வரும் செய்திகள் ஆறுதல் அளித்துள்ளன. ரகுவன்ஷி அடுத்த போட்டியில் விளையாடுவாரா அல்லது ஓய்வு அளிக்கப்படுமா என்பது குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA) விரைவில் அறிவிக்கும்.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.