Venkatesh Iyer : ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்துள்ளார். சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் வெங்கடேஷ் ஐயர் பலரது கவனத்தை ஈர்த்தார். கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை ரூ. 23.75 கோடிக்குத் தக்கவைத்திருந்தது. ஆனால், இந்த முறை இவரது ஏல மதிப்பு ரூ. 7 கோடியாகக் குறைந்தது. பலத்த போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி இவரைத் தட்டிச் சென்றது. இந்த விலை சரிவு ஒருபுறம் விவாதமானாலும், ஆர்சிபி அணியில் இவரது வருகை பலத்தை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
Add Zee News as a Preferred Source
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேரளா மற்றும் மத்தியப் பிரதேச அணிகள் மோதின. ஆர்சிபி ரசிகர்களின் கண்கள் வெங்கடேஷ் ஐயர் மீது இருக்க, மைதானத்திற்கு வந்த அவர் வெறும் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஒரு ரன்னுக்காக ஓடும்போது சக வீரர் ஹிமான்ஷு மந்த்ரியுடன் ஏற்பட்ட மோதலால், கிருஷ்ணா பிரசாத் வீசிய பந்தில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
பயிற்சியாளர்கள் சொல்வது என்ன?
வெங்கடேஷ் ஐயரின் இந்தத் தொடர் சொதப்பல்கள் சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. இது குறித்து சஞ்சய் பாங்கர் கூறுகையில், “வெங்கடேஷ் ஐயர் ஒரு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆர்சிபி ஏற்கனவே ஒரு செட்டில் ஆன அணி. எனவே, அவர் நேரடியாக ஆடும் லெவனில் இடம் பிடிப்பது என்பது சற்று சவாலான காரியம்தான்” என்று தெரிவித்துள்ளார்.
சவால் என்ன?
சஞ்சய் பாங்கர் குறிப்பிட்டது போல, ஆர்சிபி கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரு ‘செட்டில் ஆன’ அணி. எனவே, லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா போன்ற அதிரடி வீரர்கள் இருக்கும்போது, வெங்கடேஷ் ஐயர் தனது இடத்தை உறுதி செய்ய இந்த விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் தொடர்களில் ரன் குவிக்க வேண்டியது கட்டாயம்.
புள்ளிவிவரங்கள் என்ன சொல்கிறது?
வெங்கடேஷ் ஐயர் இதுவரை 56 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் விளையாடி 1,468 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 12 அரைசதங்கள் அடங்கும். இருப்பினும், கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய 7 இன்னிங்ஸ்களில் வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்தது அவருக்குப் பின்னடைவாக அமைந்தது. ரூ.7 கோடிக்கு வாங்கிய ஆர்சிபி நிர்வாகத்திற்கு, வெங்கடேஷ் ஐயர் தனது பழைய அதிரடி ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஐபிஎல் 2026 உத்தேச கால அட்டவணை:
ஐபிஎல் 2026 தொடங்கும் தேதி மார்ச் 26 வியாழக்கிழமை, இறுதிப் போட்டி மே 31 ஞாயிற்றுக்கிழமை நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 84 போட்டிகள் நடைபெறும். இந்த சீசன் முதல் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. நடப்புச் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் போட்டியில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் மைதானம் மாற்றப்படலாமா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More