Trisha: 2026-லும் பிஸி; சிரஞ்சீவி, சூர்யா படங்கள், மீண்டும் போலீஸ் கதை – த்ரிஷாவின் அசத்தல் லைன்அப்

சினிமாவில் வெள்ளிவிழா ஆண்டை நெருங்குகிறார் த்ரிஷா. கடந்த 2025ல் ‘விடா முயற்சி’, ‘குட்பேட் அக்லி’, ‘தக் லைஃப்’, ‘ஐடென்டிட்டி’ என பல படங்கள் வெளியாகி இருந்தது. அந்த வரிசையில் இப்போதும் பிஸியாக இருக்கிறார். சிரஞ்சீவியுடன் ஒரு படம், சூர்யாவுடன் ‘கருப்பு’ தவிர ஹீரோயின் சென்ட்ரிக் வெப்சிரீஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். த்ரிஷாவின் லைன் அப் குறித்து விசாரித்ததில் கிடைத்தவை.

கௌதம் மேனன் – சிம்பு கூட்டணியின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ நிஜமாகவே ஒரு மேஜிக். 1000 நாள்களைக் கடந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. மறு வெளியீட்டிலும் சாதனை படைத்த படமாகி விட்டதால், த்ரிஷாவும் “இந்தப் படத்தை உருவாக்கியது சிறப்பானது. நான் இதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒரு படத்தை உருவாக்கும்போது நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால், அந்த திரைப்படம் எப்படியோ சிறந்ததாக உருவாகிவிடும். அதனால்தான் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என் இதயத்துக்கு நெருக்கமான படம். இன்றளவும் ஜெஸ்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ரசிகர்களுக்கும், சுற்றத்தவருக்கும் சிறப்பு நன்றிகள். இப்போதும் எனக்கு ஜெஸ்ஸி குறித்து மீம்களை அனுப்புகின்றனர். தனிப்பட்ட மெஸ்ஸேஜ்களை அனுப்புகின்றனர்” என நெகிழ்ந்து நன்றி தெரிவித்து வீடியோ வெளியீட்டு பேசியிருந்தார்.

த்ரிஷா

த்ரிஷா, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘ஸ்டாலின்’ படத்திற்குப் பின் இப்போது ‘விஸ்வம்பரா’வில் மீண்டும் இணைந்துள்ளார். ஃபேன்டஸி ஆக்ஷன் படமான இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டாலும், கிராபிக்ஸ், வி.எஃப்.எக்ஸ் வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. வரும் கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வருகிறார்கள். இதில் த்ரிஷாவின் தோற்றம் பேசப்படும் என்கிறார்கள்.

தமிழில் சூர்யாவுடன் ‘கருப்பு’ படத்தில் நடித்து வருகிறார். ‘மௌனம் பேசியதே’, ‘ஆயுத எழுத்து, ‘ஆறு’ படங்களுக்குப் பின் த்ரிஷா, சூர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ‘கருப்பு’ படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. RJ பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷாவின் ரோல் பேசப்படும் என்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி ஏற்கெனவே த்ரிஷா நடிப்பில் ‘மாசாணி அம்மன்’ படத்தைத் தொடங்குவற்கான பேச்சு எழுந்த சூழலில், இந்த படத்திற்குள் த்ரிஷா வந்திருப்பதால் அவரது ரோலை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ‘கருப்பு’ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது.

இதனை அடுத்து ‘பிருந்தா 2’ வெப்சிரீஸில் நடிக்க உள்ளார். சோனி லிவ் தளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான வெப்சிரீஸ் ‘பிருந்தா’. இதில் ஹைதராபாத் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக (எஸ்.ஐ) ஆகப் பணிபுரிகிறார் பிருந்தா. அங்கே அவரது திறமையை அனைவரும் நிராகரிக்கிறார்கள். அதன் பின் அவரது திறமையை எப்படி நிரூபிக்கிறார் என்பதை 8 எபிசோடுகளில் திக்…திக் அனுபவத்தோடு சொல்லியிருந்தார்கள். அந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பில் இப்போது ‘பிருந்தா 2’ உருவாகிறது. ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.

பிருந்தா படப்பிடிப்பில்

தமிழில் இரண்டு கதைகள் கேட்டு வைத்திருக்கிறார். ‘கருப்பு’ வெளியான பிறகு அடுத்த அதிரடி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள். தவிர, மோகன்லாலுடன் ‘ராம்’ என்ற படமும் கைவசம் வைத்துள்ளார். கடந்த 2020 லாக்டவுனுக்கு முன்னரே இதன் படப்பிடிப்பு ஆரம்பமானது. பல்வேறு காலகட்டங்களை பிரதிபலிக்கும் இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இன்னும் சில ஷெட்யூல்கள் படப்பிடிப்பு மீதமிருக்கின்றன என்பதால், ‘ராம்’ மீண்டும் எப்போது துவங்கினாலும் கால்ஷீட் கொடுப்பார் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.