ஆயுஷ் பதோனி: சுட்டிப் பையனுக்கு கொட்டிக் கொடுக்கும் லக்னோ – ஐபிஎல் ஜாக்பாட் அப்டேட்!

Ayush Badoni: இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்தடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது டெல்லியைச் சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர் ஆயுஷ் பதோனிக்கு சான்ஸ் கிடைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இவர் சேர்க்கபட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியதையடுத்து அவருக்கு மாற்றாக பதோனி சேர்க்கப்பட்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source

யார் இந்த ஆயுஷ் பதோனி? 

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் வெறும் 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டவர் தான் இந்த ஆயுஷ் பதோனி. தனது முதல் போட்டியிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 54 ரன்கள் குவித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். லக்னோ அணி தடுமாறிய போதெல்லாம் ‘பினிஷர்’ அவதாரம் எடுத்து அந்த அணியை மீட்டெடுத்தவர். இவருடைய ஆட்டத்தைப் பார்த்த அப்போதைய லக்னோ ஆலோசகர் கௌதம் கம்பீர், இவரை Baby AB என்று அழைத்தார்.

லக்னோ செய்த ஜாக்பாட் முதலீடு: 

மூன்று சீசன்களாக 20 லட்சம் ரூபாய்க்கு விளையாடி வந்த பதோனியின் திறமைக்கு, 2025 மெகா ஏலத்திற்கு முன்பாக லக்னோ அணி மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்தது. ‘அன்கேப்டு’ (Uncapped) வீரராக அவரை 4 கோடி ரூபாய்க்கு லக்னோ தக்கவைத்துக் கொண்டது. 20 லட்சத்தில் இருந்து ஒரே அடியாக 4 கோடி ரூபாய்க்கு இவரது சம்பளம் உயர்ந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது எப்படி? 

உள்நாட்டுப் போட்டிகளில் டெல்லி அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வரும் பதோனி, சமீபகாலமாகத் தனது பேட்டிங்குடன் சேர்த்து பந்துவீச்சிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். வாஷிங்டன் சுந்தரைப் போலவே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக் கூடிய ஒரு வீரரைத் தேடிய தேர்வுக்குழுவின் பார்வை பதோனி மீது விழுந்தது. குறிப்பாக கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பதால், பதோனியின் திறமை மீது அவருக்கு உள்ள அதீத நம்பிக்கை இந்த வாய்ப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஐபிஎல் சம்பளம் இன்னும் உயருமா? 

தற்போது 4 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்டுள்ள பதோனி, நியூசிலாந்து தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகிவிட்டால், அவர் ‘கேப்டு’ வீரராக மாறிவிடுவார். இதனால் அடுத்த மெகா ஏலத்திற்கு முன்பாக லக்னோ அணி அவரைத் தக்கவைக்க விரும்பினால், அவரது சம்பளத்தை பல மடங்கு உயர்த்த வேண்டியிருக்கும்.

ஆயுஷ் பதோனி: ஐபிஎல் பயணமும் புள்ளிவிவரங்களும்

டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் ஆயுஷ் பதோனி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகக் 2022ல் அறிமுகமாகி, தனது அறிமுக ஐபிஎல் தொடரிலேயே பதோனி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 161 ரன்களைக் குவித்தார். குறிப்பாக, தனது முதல் போட்டியிலேயே 41 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து, 6-வது வரிசையில் களமிறங்கி அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

தொடர்ந்து தனது திறமையை மெருகேற்றிய பதோனி, 2023 ஆம் ஆண்டு சீசனில் 238 ரன்களையும், 2024 ஆம் ஆண்டு சீசனில் 235 ரன்களையும் சேர்த்தார். இந்த காலக்கட்டத்தில் லக்னோ அணியின் நம்பிக்கைக்குரிய பினிஷராக உருவெடுத்தார். இக்கட்டான நேரங்களில் களமிறங்கி அதிரடியாக விளையாடுவதிலும், விக்கெட்டுகள் சரிந்தபோது நிதானமாக விளையாடி அணியை மீட்பதிலும் இவர் வல்லவர் என்பதை நிரூபித்தார்.

பதோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் மிக முக்கியமானது. முதல்முறையாக ஒரு சீசனில் 300 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார். இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 329 ரன்களைக் குவித்தார். அவரது பேட்டிங் சராசரி 32-க்கு மேல் இருந்ததோடு, 148-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைச் சேர்த்தார். இதில் இரண்டு அதிரடி அரைசதங்களும் அடங்கும்.

பேட்டிங் மட்டுமின்றி, தனது ஆஃப் ஸ்பின் பந்துவீச்சின் மூலமும் அவ்வப்போது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் மொத்தம் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். குறிப்பாக 2025 சீசனில் இவரது பந்துவீச்சு லக்னோ அணிக்குக் கூடுதல் பலமாக அமைந்தது. ஒட்டுமொத்தமாக 56 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள பதோனி, இதுவரை 963 ரன்களைச் சேர்த்துள்ளார். விரைவில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டவுள்ள இவருக்கு, தற்போது இந்திய அணியில் கிடைத்துள்ள வாய்ப்பு அவரது கிரிக்கெட் பயணத்தின் அடுத்த கட்டமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும்  படிக்க | வாஷிங்டன் சுந்தருக்கு பதில்… இந்திய அணியில் இணைந்த முக்கிய வீரர்!

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.