காலியான சஞ்சு சாம்சன் இடம்! உலக கோப்பைக்கு முன்பே மாற்றப்படுவாரா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை இந்தியா வென்றுள்ளது. ஐந்து போட்டிகள் இந்த தொடரில் முதல் மூன்று போட்டியில் வெற்றி பெற்று 3-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்த நிலையில் தற்போது டி20 தொடரில் பதிலடி கொடுத்துள்ளது. இது அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலக கோப்பைக்கு முன்னதாக, இந்திய அணிக்கு கூடுதல் தெம்பை தந்துள்ளது. இருப்பினும் சஞ்சு சாம்சன் பார்ம் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து மூன்று போட்டிகளாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி உள்ளார்.

Add Zee News as a Preferred Source

சஞ்சு சாம்சன்

சுப்மன் கில் டி20 அணியில் நீக்கப்பட்ட நிலையில், சஞ்சு சாம்சனிற்கு மீண்டும் அவரது ஓப்பனிங் இடம் கிடைத்தது. இனி அவர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும், பவர்பிளே முடிவதற்குள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் போட்டியில் 10 ரன்களிலும், இரண்டாவது போட்டியில் 6 ரன்களிலும் ஆட்டம் இழந்த நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்துள்ளார். 

டி20 உலக கோப்பை

டி20 போட்டிகளில் இதுவரை சஞ்சு சாம்சன் ஏழு முறை டக் அவுட் ஆகி உள்ளார். அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வந்த நிலையில் பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் அதிரடியாக சதம் அடித்து இந்திய டி20 அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இதன் காரணமாக தான் அவர் உலக கோப்பை அணியில் இடம் பெற்றார். ஆனால் தற்போது அவரது இடம் இந்திய அணியில் கேள்விக்குறியாகி உள்ளது. ஏனெனில் பேக்கப் வீரராக எடுக்கப்பட்ட இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி வருகிறார். சஞ்சு சாம்சன் இதே போல விளையாடினால், உலக கோப்பையில் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் கூட்டணி தொடக்க வீரராக களம் இறங்கக்கூடும். 

திலக் வர்மா?

நான்காவது டி20 போட்டியில் திலக் வர்மா வந்துவிட்டால் நிச்சயம் சஞ்சு சாம்சன் அணியிலிருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை திலக் வர்மா காயம் காரணமாக முழு தொடரிலிருந்து விலகினாலும், பேக்கப் வீரராக இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படும். அவர் ஒரு போட்டியில் பெர்பார்ம் செய்தாலும் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் உள்ள நிலையில் அதில் சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.