இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலக கோப்பை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்களாதேஷ் அணி விலகியுள்ள நிலையில் அவர்களுக்கு பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற டி20 உலக கோப்பையை, இந்திய அணி வென்ற நிலையில் இந்த முறையும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. கிரிக்கெட் உலகில் ஜாம்பவான்களாக இருந்து வரும் வீரர்கள் ஓய்வை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை முடிந்தவுடன் பலர் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய டி20 போட்டியின் நிலை மாறி வருகிறது. முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல சீனியர் வீரர்களால் இதற்கு ஏற்ப ஆட முடியவில்லை. இந்த டி20 உலக கோப்பையுடன் யார் யார் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Add Zee News as a Preferred Source
முகமது நபி (ஆப்கானிஸ்தான்)
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இருந்து வருபவர் முகமது நபி. உலக அளவில் ஆப்கானிஸ்தான் அணியை கொண்டு சென்றதில் இவருடைய பங்கும் உண்டு. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கும் முகமது நபிக்கு தற்போது வயது 41 ஆகிறது. அடுத்த டி20 உலகக்கோப்பை 2028ல் தான் நடக்கும். அப்போது அவருக்கு 43 வயதாகிவிடும் என்பதால், இதுவே அவரது கடைசி உலகக்கோப்பையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இதுவரை முகமது நபி 137 டி20 போட்டிகளில் 2430 ரன்களையும், 104 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா)
டி20 கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளவர் கிளென் மேக்ஸ்வெல். இவர் ஆட்டமிழக்காமல் இருந்தால் எப்படியும் வெற்றியை பெற்று தருவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கும். மைதானத்தின் அனைத்து பக்கமும் பந்தை சிதறடிக்கும் இவரின் அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு எப்போதும் பிடிக்கும். இதுவரை 115 இன்னிங்ஸ்களில் 2835 ரன்களும், 5 சதங்களும் விளாசியுள்ள மேக்ஸ்வெல், பந்துவீச்சிலும் 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வயது மூப்பு காரணமாகவும், இளைஞர்களுக்கு வழி விடவும் இந்த தொடருடன் மேக்ஸ்வெல் ஓய்வை அறிவிக்கலாம்.

அடில் ரஷித் (இங்கிலாந்து)
கடந்த பத்து ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் அடில் ரஷித் தனி ஒருவராக பல்வேறு வெற்றிகளை தேடி தந்துள்ளார். குறிப்பாக மிடில் ஓவர்களில் விக்கெட்களை வீழ்த்தி எதிரணியை கட்டுப்படுத்துவதில் வல்லவர். இங்கிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் அதிக விக்கெட் (145) வீழ்த்தியவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். வயது காரணமாக இவரும் இந்த தொடருடன் ஓய்வை அறிவிக்கலாம்.
ஃபகர் ஜமான் (பாகிஸ்தான்)
பாகிஸ்தான் அணியின் இடதுகை தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஜமான். பல சூழ்நிலைகளில் அணியை காப்பாற்றி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகள் புரிந்துள்ள இவர், டி20 கிரிக்கெட்டிலும் அதிரடி காட்டி வருகிறார். 106 இன்னிங்ஸ்களில் 2,365 ரன்கள் குவித்துள்ளார் ஃபகர் ஜமான். தற்போது பாகிஸ்தான் அணி இளம் வீரர்களுக்கு அதிகம் வாய்ப்பளித்து வருவதால், ஃபகர் ஜமானுக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம்.
டேவிட் மில்லர் (தென்னாப்பிரிக்கா)
கில்லர் மில்லர் என்று அழைக்கப்படும் டேவிட் மில்லர், உலகின் தலை சிறந்த பினிஷர்களில் ஒருவர். ஐபிஎல் தொடர்களில் இவரை எடுக்க ஒவ்வொரு அணியும் போட்டி போடும். இதுவரை 117 சர்வதேச டி20 போட்டிகளில் 2,630 ரன்கள் குவித்து, இரண்டு சதங்களையும் விளாசியுள்ளார். இந்நிலையில் மில்லரும் இத்தொடருடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம்.

About the Author
RK Spark