Chennai Super Kings, IPL 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி, மார்ச் 8ஆம் தேதிவரை இத்தொடர் நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடரும் இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
IPL 2026: ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பு
எனவே, ஐபிஎல் ரசிகர்களும், அணிகளின் நிர்வாகமும் உலகக் கோப்பையில் இந்திய அணியை மட்டும் பார்க்காமல், மற்ற அணிகளில் விளையாடும் தங்களுக்கு விருப்பமான அணிகளின் வீரர்களையும் உற்றுநோக்குவார்கள். உதாரணத்திற்கு சிஎஸ்கே தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸை உற்றுநோக்குவார்கள். மும்பை இந்தியன்ஸ் இந்த முறை குவின்டன் டீ காக்கை அதிகம் உற்றுநோக்குவார்கள்.
இதேபோல் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் பல வீரர்களை நோட்டமிடும். அவர்கள் இந்திய மண்ணில் எந்தளவிற்கு சோபிக்கிறார்களோ, அதை வைத்துதான் அவர்கள் பிளேயிங் லெவனில் இருப்பார்களா? மாட்டார்களா?, அந்த அணியின் காம்பினேஷனை எப்படி அமைக்கப்படும் என்பதும் தெரியவரும். வெளிநாட்டு வீரர்களே இந்தளவிற்கு உற்றுநோக்கப்படும்போது, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் மீதும் அதிக வெளிச்சம் இருக்கும்.
Chennai Super Kings: சஞ்சு மற்றும் தூபே
சிஎஸ்கே அணியை பொருத்தவரை சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே உள்ளிட்டோர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிகளில் விளையாடுகின்றனர். இருவருமே இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் நிச்சயம் இடம்பெறுவார்கள். சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவின் ஓபனிங்கிலும், ஷிவம் தூபே மிடில் ஆர்டரிலும் விளையாடுவார்கள். இதில், ஷிவம் தூபேவுக்கு இந்த சீசனில் பெரிய பொறுப்பு இருக்கிறது எனலாம்.
Chennai Super Kings: சிஎஸ்கேவின் அசைக்க முடியாத பேட்டிங்
சிஎஸ்கே அணி 2023இல் கோப்பையை வென்ற பிறகு, 2024இல் 5வது இடத்திலும், 2025இல் 10வது இடத்திலும் நிறைவு செய்தது. வலுவான பேட்டிங் இல்லாதது சிஎஸ்கேவின் தொடர் சொதப்பலுக்கு ஒரு காரணமாக இருந்தது. ஆனால், தற்போது சஞ்சு சாம்சன் – ஆயுஷ் மாத்ரே – ருதுராஜ் கெய்க்வாட் – டெவால்ட் பிரெவிஸ் – ஷிவம் தூபே என டாப் ஆர்டர் பலமாக இருக்கிறது, இவர்களுடன் உர்வில் பட்டேல் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் பேக்-அப்பாக இருப்பதன் மூலம் சிஎஸ்கேவின் பேட்டிங்கை அசைத்துக்கொள்ளவே முடியாது எனலாம்.
Chennai Super Kings: சிஎஸ்கேவில் தூபேவின் பந்துவீச்சு…
ஆனால் பந்துவீச்சில் சிஎஸ்கே அந்தளவிற்கு பலமாக இல்லை. இந்திய வேகப்பந்துவீச்சாளர்களாக கலீல் அகமது – அன்சுல் கம்போஜ் – குர்ஜப்னீத் சிங் – முகேஷ் சௌத்ரி உள்ளிட்டோர் இருக்கின்றனர், ராமகிருஷ்ண கோஷ் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இருக்கிறார். இதில் ஷிவம் தூபேவும் அடக்கம் என்றாலும் அவர் சிஎஸ்கே அணியில் பெரியளவில் பந்துவீசியதே கிடையாது. 2022ஆம் ஆண்டில் இருந்து ஷிவம் தூபே சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். 2022இல் 2 ஓவர்கள், 2024இல் 1 ஓவர், 2025இல் 2 ஓவர்கள் என கடந்த 4 சீசன்களில் 5 ஓவர்களை மட்டும் வீசி 1 விக்கெட்டை மட்டுமே எடுத்திருக்கிறார், அதிலும் 83 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.
Chennai Super Kings: சிஎஸ்கேவின் பெரிய தலைவலி போகும்
ஆனால், தற்போது இந்திய அணிக்காக தொடர் பந்துவீசி வருகிறார் ஷிவம் தூபே. அதுவும் டி20ஐ போட்டிகளில் இதுவரை 37 இன்னிங்ஸில் பந்துவீசி 26 விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். அவர் பவுன்ஸர், வேகத்தை மாற்றி மாற்றி வீசுவது என சில வேரியேஷன்களையும் கையில் வைத்திருக்கிறார். எனவே வரும் 2026 சீசனில் சிஎஸ்கே நிச்சயம் ஒவ்வொரு போட்டியிலும் 2-3 ஓவர்களை இவருக்கு ஒதுக்க வேண்டும். இதில் ஷிவம் தூபே சிறப்பாக செயல்பட்டால் சிஎஸ்கேவுக்கு தற்போது இருக்கும் பெரிய தலைவலி ஒன்று நீங்கும்.
Chennai Super Kings: ஷிவம் தூபே பந்துவீசுவது ஏன் அவசியம்?
ஷிவம் தூபே பந்துவீசினால் தனியே ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை சிஎஸ்கே விளையாட வேண்டிய அவசியம் குறைந்துவிடும். அதற்கு பதில் சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான அகேல் ஹொசைனை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கலாம். இதனால் ராகுல் சஹார், ஷ்ரேயாஸ் கோபால் போன்றோரையும் விளையாட வேண்டிய தேவை ஏற்படாது. அணியில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள், மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பர். தேவைக்கேற்ப ருதுராஜ் பந்துவீச்சை மாற்றிக்கொள்ளலாம். மேலும், பிரசாந்த் வீர் சொதப்பினால் கூட கார்த்திக் சர்மாவை பிளேயிங் லெவனில் சேர்க்கலாம். அதாவது, ஷிவம் தூபே பந்துவீசினால் சிஎஸ்கே பல காம்பினேஷனை முயற்சித்து பார்க்கலாம்.
CSK: சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் கணிப்பு
சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே/உர்வில் பட்டேல், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே, டெவால்ட் பிரெவிஸ், பிரசாந்த் வீர், எம்எஸ் தோனி, அகேல் ஹொசைன், நூர் அகமது, கலீல் அமகது, நாதன் எல்லிஸ். இம்பாக்ட் வீரர்: அன்சுல் கம்போஜ்.
மேலும் படிக்க | CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பிறந்தாநாள் இன்று.. அவர் செய்த சாதனைகள்.. சொத்து மதிப்பு என்ன?
மேலும் படிக்க | இந்த CSK வீரருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்? அவரே சொன்ன பதில்!
மேலும் படிக்க | ஐபிஎல் 2026ல் 3வது இடத்தில் களமிறங்கும் தோனி? வெளியான முக்கிய தகவல்!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More