Doctor Vikatan: 60 வயதில் சர்க்கரைநோய்… சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டாலே போதுமா?

Doctor Vikatan: என் வயது 60. எனக்கு சர்க்கரைநோய் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சர்க்கரைநோயை சித்த மருத்துவத்தின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியுமா…  சித்த மருந்துகளில் என்ன, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என வழிகாட்டுவீர்களா?

பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

சர்க்கரைநோய் எந்த வயதில் வேண்டுமானாலும் கண்டறியப்படலாம். 60 வயதில் கண்டறியப்பட்டாலும் சரி அல்லது 30- 40களில் கண்டறியப்பட்டாலும் சரி, உணவுமுறை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் அது கட்டுப்படுத்தப்பட வேண்டும். அப்படி இல்லையெனில், கட்டாயமாக ஏதேனும் ஒரு மருத்துவ முறையைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும்.

60 வயது எனும் போது நீங்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்களுக்கு இப்போதுதான் முதல்முறையாக சர்க்கரைநோய்  கண்டறியப்பட்டதா அல்லது பல ஆண்டுகளாக இருந்து இப்போதுதான் அறிகுறிகள் தெரிகின்றனவா என்பதைக் கணித்து மருந்து கொடுப்பது நல்லது.

சர்க்கரை நோய்க்கு சாதாரணமாகப் பார்க்கப்படும் உணவுக்கு முன் (Before), பின் (After) ரத்தப் பரிசோதனைகளுடன், ஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் மூன்றுமாத கால சராசரியையும் பார்த்துவிட்டு மருத்துவத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. 

ஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் மூன்றுமாத கால சராசரியையும் பார்த்துவிட்டு மருத்துவத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

60 வயது என்பதால் சித்த மருத்துவமும், நவீன மருத்துவமும் இணைந்த  ஒருங்கிணைந்த மருத்துவத்தைத் தொடங்குவது இப்போதைக்கு நல்லது.

சர்க்கரை அளவு 200 அல்லது 250 தான் இருக்கிறது என்றால் தாராளமாக சித்த மருந்துகளை எடுக்கலாம். சித்த மருந்துகளை எடுக்கும்போது  சித்த மருத்துவரைச் சந்தித்து ஆலோசனையின் பேரில் எடுப்பது மிக முக்கியம்.

சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில், மதுமேகச் சூரணம், திரிபலா சூரணம், ஆவாரைக் குடிநீர், சீந்தில் மாத்திரை போன்றவை பிரபலமானவை. இவை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும். இவை நான்குமே நல்ல பலனைத் தரக்கூடியவை. மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொண்டு அவ்வப்போது சர்க்கரை அளவைச் சரிபார்த்து வந்தால், எந்தபாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும். மருந்துகள் மட்டுமன்றி உணவுரீதியாகவும் கவனம் செலுத்த வேண்டும். வெந்தயம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில், மதுமேகச் சூரணம், திரிபலா சூரணம், ஆவாரைக் குடிநீர், சீந்தில் மாத்திரை போன்றவை பிரபலமானவை.

நார்ச்சத்து (Fiber) மிகுந்த உணவுகளை அதிகம் எடுக்க வேண்டும். வயதிற்கு ஏற்ப அளவோடு சாப்பிட வேண்டும். மாவுச்சத்தைக் (Carbohydrates) குறைத்துவிட்டுப் புரதச்சத்து (Protein) அதிகமாக இருக்கும் முறையைப் பின்பற்றலாம். நிறைய காய் மற்றும் கீரை வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். 60 வயதில் நுண்ஊட்டச்சத்து (Micronutrients) குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் பழங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. திராட்சை, சாத்துக்குடி, மாதுளம்பழம் மற்றும் அந்தந்தக் காலங்களில் கிடைக்கும் நாவல் பழம், விளாம்பழம் போன்றவற்றை மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம். மூட்டுவலி போன்ற உபாதைகள் இல்லை என்றால் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியைத் தொடர வேண்டும். நல்ல உறக்கம் மற்றும் சரியான உணவுமுறையைப் பின்பற்றினால் சர்க்கரை நோயிலிருந்து எளிதாக வெளியே வந்துவிடலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.