Doctor Vikatan: மகனுக்கு நெற்றியில் பருக்கள்… முகம் ஃப்ரெஷ்ஷாக பருக்களின்றி இருக்க என்ன வழி? 

Doctor Vikatan: என் மகனுக்கு 12 வயதாகிறது. கடந்த சில நாள்களாக அவனுக்கு நெற்றியில், முகத்தில், தாடையில் எல்லாம் பருக்கள் வருகின்றன. அவன் முகம் கழுவியதும் சில நிமிடங்களுக்கு முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. ஆனால், அது அரை மணி நேரம்கூட நீடிப்பதில்லை. எண்ணெய் வடிய ஆரம்பிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு…?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா
சருமநல மருத்துவர் பூர்ணிமா

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிரச்னை, ‘செபோரிக் டெர்மடைடிஸ்’ (Seborrheic dermatitis) என்று அழைக்கப்படுகிறது. அதாவது செபோரியா என்பது நம் உடல் உற்பத்தி செய்யும் ஒருவித எண்ணெய். இந்த எண்ணெய் நம் உடலில் அதிகமாகச் சுரப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

உணவுப் பழக்கவழக்கங்கள் (அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள்), உடற்பயிற்சியின்மை, ஹார்மோன் மாற்றங்கள், தலைமுடியில் எண்ணெய் வைக்கும் பழக்கம் என இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். 

நமது வாழ்க்கைமுறையில் மாற்றங்களைக் கொண்டு வரும்போதுதான் இந்த எண்ணெய்ச் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். அதன் விளைவாக முகப்பருக்கள் வருவதும் குறையும். சருமப் பராமரிப்புக்குச் சரியான தயாரிப்புகளைப் பயன்படுத்துவது அவசியம்.

சாலிசிலிக் அமிலம் (Salicylic acid), கிளைகாலிக் அமிலம் (Glycolic acid) அல்லது அசிலெயிக் அமிலம் (Azelaic acid) போன்ற அமிலங்கள் கொண்ட ஃபேஸ் வாஷ் (Face wash) பயன்படுத்துவது எண்ணெய்ச் சுரப்பைக் கட்டுப்படுத்தவும், முகப்பருவைத் தடுக்கவும் உதவும். 

பொடுகு நீக்கும் ஷாம்பூவை (Anti-dandruff shampoo) வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்த வேண்டும்.

ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்ச்சரைசர் (Gel-based moisturizer) மற்றும் சன்ஸ்கிரீன் (Sunscreen) ஆகியவற்றை உங்கள் மகனின் அன்றாட சருமப் பராமரிப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றையும் மீறி முகப்பருக்கள் வந்தால், ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

மருத்துவரின் பரிந்துரைப்படி ஆன்டிபயாடிக் கிரீம்கள் (Antibiotic creams) அல்லது வாய்வழி எடுத்துக்கொள்ளக்கூடிய ஆன்டிபயாடிக் மருந்துகள் (Oral antibiotics) தேவைப்படுகின்றனவா என்று பார்த்துப் பயன்படுத்தலாம். தலைமுடியை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

வாரத்திற்கு 3 முதல் 4 முறை தலைக்குக் குளிக்க வேண்டும். கீட்டோகோனசோல் (Ketoconazole) அல்லது லுலிகோனசோல் (Luliconazole) போன்றவை உள்ள பொடுகு நீக்கும் ஷாம்பூவை (Anti-dandruff shampoo) வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்த வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம் முகமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும், எண்ணெய் சுரப்பும் குறையும், முகப்பருக்கள் வருவதும் பெருமளவு குறையும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.