இந்த வாரம் டி20 உலக கோப்பை தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் விளையாடுகின்றன. பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த டி20 உலக கோப்பை தொடர் மார்ச் மாதம் முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு அணிகளாக இந்தியா மற்றும் இலங்கைக்கு வர தொடங்கியுள்ளனர். பங்களாதேஷ் அணி இந்த தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில், பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிராக விளையாட மாட்டோம் என்று தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் டி20 உலக கோப்பை தொடங்குகிறது. இந்திய அணி தங்களது முதல் போட்டியில் அமெரிக்காவிற்கு எதிராக விளையாடுகிறது.
Add Zee News as a Preferred Source

2027 ஒருநாள் உலக கோப்பை
அடுத்து ஒருநாள் உலகக்கோப்பை தொடங்க இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில், அதற்குள் இந்திய அணியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒருநாள் உலக கோப்பையில் இடம் பெறுவார்களா என்பது பெரும் சந்தேகத்தில் தான் இருந்து வருகிறது. இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், தற்போது ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இருவரும் நல்ல பார்மிலும் இருந்து வருகின்றனர். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர்களில் இருவரும் சிறப்பாக விளையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி கருத்து
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஒருநாள் உலக கோப்பையில் விளையாட வேண்டுமா என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் தோனியிடம் கேட்கப்பட்டது. இதற்கு தோனி சிறப்பான ஒரு விளக்கம் அளித்துள்ளார். “ஏன் விளையாடக்கூடாது? என்னை பொறுத்தவரை வயது என்பது ஒரு தகுதியே கிடையாது. அணியில் இடம் பெறுவதற்கு இரண்டு விஷயங்கள் தான் முக்கியம். ஒன்று செயல்திறன், மற்றொன்று உடற்தகுதி. நான் 24 வயதில் அறிமுகமானபோதும் சரி, 10 அல்லது 20 ஆண்டுகள் விளையாடிய பிறகும் சரி, யாரும் வந்து என்னிடம் உனக்கு வயதாகிவிட்டது என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதே போலத்தான் ரோகித், விராட் போன்றவர்களுக்கும். அவர்கள் நாட்டுக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் வரை, அவர்களின் ஆட்டத்தில் வேகம் இருக்கும் வரை அவர்களை தடுக்க யாருக்கும் உரிமையில்லை.

நீங்கள் 22 வயது இளைஞராக இருந்தாலும், உடற்தகுதி இல்லையென்றால் அணியில் இடம் கிடைக்காது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு என்று சில வரையறைகள் உள்ளன. ரோகித், விராட் அல்லது எதிர்காலத்தில் வரப்போகும் எந்த வீரராக இருந்தாலும், அவர்கள் 30 வயதை கடந்துவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் விளையாடலாமா வேண்டாமா என்பதை நாம் முடிவு செய்யக்கூடாது. அதை முடிவு செய்ய வேண்டியது அவர்கள் தான். அவர்கள் தொடர்ந்து ரன் குவித்தால், அணியின் வெற்றிக்கு பங்காற்றினால், நிச்சயம் அவர்கள் அடுத்த உலக கோப்பையில் விளையாடலாம்,” என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா
விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் தான் ஒரு ஜாம்பவான் என்பதை நிரூபித்து வருகிறார். அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் சதம் அடித்து தன்னுடைய பேட்டிங் பார்மை நிரூபித்து வருகிறார். மறுபுறம் ரோகித் சர்மா பவர் பிளேயில் தான் ஒரு பீஸ்ட் என்பதை நிரூபித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் அவரது பேட்டிங் ஸ்டைலை மாற்றிக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார். இருப்பினும் இந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி விளையாடும் ஒரு நாள் போட்டிகளில் இவர்களின் பெர்பார்மன்ஸ் பொருத்து 2027 உலகக்கோப்பையில் இவர்கள் விளையாடுவார்களா? மாட்டார்களா? என்பது முடிவு செய்யப்படும். ரோகித் சர்மாவிற்கு பதிலாக ஜெய்ஸ்வாலும், விராட் கோலிக்கு பதிலாக ருதுராஜ் கெய்குவாடும் அவர்கள் இடத்தை பிடிக்க தயாராக உள்ளனர்.
About the Author
RK Spark