கிரிக்கெட் போட்டி தற்போது முன்பு போல் இல்லை. அது நாளுக்கு நாள் வேக எடுத்துக்கொண்டே செல்கிறது. 2007ஆம் ஆண்டுக்கு முன்பு டி20 போட்டி என்பதே கிடையாது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான். ஆனால் இப்போது டி10 வரை சென்றுவிட்டது. மக்களும் அது போன்ற அதிரடியான கிரிகெட்டையே பார்க்க விரும்புகின்றனர்.
Add Zee News as a Preferred Source
நவீன கிரிக்கெட்
முதலில் ஒருநாள் போட்டி கூட 60 ஓவர்களாக இருந்தது. பின்னர் அது 50 ஒவர்களாக குறைக்கப்பட்டது. டெஸ்ட் போட்டி என்பது அவ்வளவு ஆர்வத்துடன் 5 நாட்கள் முழுவையாக விறுவிறுப்பாக நடக்கும். ஆனால் இந்த நவீன கிரிக்கெட் உலகில், டெஸ்ட் கிரிக்கெட் என்பது அதிகபட்சமாக 3 நாட்கள் மட்டுமே நடக்கிறது. ஒரு சில போட்டி மட்டுமே 5 நாட்கள் வரை நடைபெறுகிறது. 5 நாட்கள் முடிந்து டிரா என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போய்விட்டது. இப்படி வேகமாக மாறிவரும் கிரிக்கெட்டில் ஒருவருடைய சாதனையை மட்டும் முறியடிக்க முடியவில்லை. பல சாதனைகளை உருவாக்கிய சச்சின் டெண்டுல்கர், அவருடைய சாதனைகளை தகர்த்து வரும் விராட் கோலி என உலகின் சிறந்த கிரிக்கெட்டர்கள் கூட அந்த ஒரு சாதனையை முறியடிக்க முடியவில்லை.
சச்சின் சாதனையை கோலி முறியடிப்பாரா?
உலக அளவில் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை விராட் கோலி நெருங்கி வருகிறார். விராட் கோலி தற்போது வரை 85 சதங்கள் அடித்து அசத்தி உள்ளார். சச்சின் சாதனையை சமன் செய்ய அவருக்கு இன்னும் 15 சதங்கள் தேவைப்படுகின்றன. விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். அவர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால், அவர் சச்சின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
யாராலும் நெருங்க முடியாத சாதனை
இதற்கு மத்தியில், உலகின் எந்த பேட்டரும், ஏன் விராட் கோலி கூட நெருங்க முடியாத ஒரு சாதனையை இந்திய வீரர் ஒருவர் படைத்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
ராகுல் டிராவிட் மிகப்பெரிய சாதனை
அவர் யார் என்றால், இந்திய அணியின் ‘தி கிரேட் வால்’ என போற்றப்படும் ராகுல் டிராவிட் தான். அவர் யாராலும் நெருங்க முடியாத சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மொத்தம் 31,258 பந்துகளை எதிர்கொண்டு ராகுல் டிராவிட் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை தான் எவரும் எட்ட முடியாத அளவிற்கு உள்ளது. ராகுல் டிராவிட்டை போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் எந்த வீரரும் இத்தனை பந்துகளை எதிர்கொள்ளவில்லை. 30,000 பந்துகளுக்கு மேல் சந்தித்த வீரராக ராகுல் டிராவிட் உள்ளார்.
சச்சினை விட குறைவான போட்டிகள்
இவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ், ஷிவ் நரேன் சந்தர்பால், அலன் பார்டர் ஆகியோர் உள்ளனர். சச்சின் 29,400 பந்துகளுக்கு மேல் சந்தித்துள்ளார். தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் 28,903 பந்துகள் சந்தித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் 27,395 பந்துக்களை சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் அலன் பார்டர் 27,002 பந்துகள் சந்தித்துள்ளார். இதில் சச்சின் டெண்டுல்கர் டிராவிட்டை விட அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் 200 போட்டிகளில் விளையாடிய நிலையில், டிராவிட் 164 போட்டிகளிலேயே விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் டிராவிட்டின் ஆதிக்கம்
அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்பது மட்டுமல்லாமல் களத்தில் அதிக நேரம் இருந்திருக்கும் வீரர் என்ற பெருமையையும் டிராவிட் வைத்துள்ளார். கிட்டத்தட்ட 44,152 நிமிடங்கள் களத்தில் இருந்துள்ளார். அதாவது 735 மணி நேரம் இருந்துள்ளார். நாட்களாக கணக்கிடும்போது, 30 நாட்கள் 15 மணி நேரம் ஆகும். அதேபோல், 31,258 பந்துகள் என்றபோது, அது கிட்டத்தட்ட 5000 ஓவர்களுக்கு மேல் ஆகிறது. இது விக்கெட்டை அவ்வளவு எளிதாக எதிரணிக்கு கொடுத்துவிடாததை காட்டுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ரன்கள் சேர்ப்பதை விட பந்து வீச்சாளரை சோர்வடைய செய்வதில் வல்லவராக இருந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் பேட்டிங் செய்ய வந்தாலே பந்து வீச்சாளர்கள் சற்று பயப்படும் நிலை இருந்துள்ளது. அந்த அளவிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி உள்ளார்.
ராகுல் டிராவிட் 1996ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். முதல் போட்டியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியையும் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியையும் எதிர்கொண்டுள்ளார். 2012ஆம் ஆண்டு வரை பயணித்த இவர், 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ரன்கள் குவித்துள்ளார். இதில் 36 சதங்களும் 63 அரைசதங்களும் அடங்கும். அதேபோல் 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,889 ரன்கள் குவித்துள்ளார். இதில் 12 சதங்கள் மற்றும் 83 அரைசதங்களும் அடங்கும்.
களத்திற்கு வெளியேவும் அசத்தல்
களத்தில் மட்டும் சாதனையை படைத்தது மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியிலும் இந்திய அணியை வழிநடத்தி அசத்தி இருக்கிறார். தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் உள்ளார். அவருக்கு முன்பாக ராகுல் டிராவிட்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். இவரது வழிநடத்தலில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji