தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் `தமிழ்நாடு தலை குனியாது’ என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆலங்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டடேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், “கொடநாடு கொலை வழக்கு என்றைக்கு எடுக்கப்பட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினராகக்கூட வர முடியாது.

எத்தனை ஆதாரங்களை அளித்தாலும் எத்தனை கோணங்களில் நீங்கள் எதை செய்தாலும் சட்டம் உங்களை துரத்தி துரத்தி அடிக்கும். இன்று உங்களுக்கு மத்திய அரசினுடைய பாதுகாப்பு இருக்கலாம். தேர்தலுக்குப் பின்னால் கூவத்தூரில் உருவான அ.தி.மு.க பெறக்கூடிய சட்டமன்ற தொகுதிகள் எவ்வளவு என்று யூகித்து பார்த்தால் என்னுடைய யூகம் எல்லாம் மூன்றாவது இடம்.
ஒரு தொகுதி கூட அதிமுக பெறாது என்பதுதான். காரணம், அ.தி.மு.க-வை பாஜகவின் கிளைக் கழகமாக மாற்றி விட்டார்கள். தனித்தன்மை என்பதே இல்லை. கொள்கை என்பதே இல்லை. சொல்வதைக் கேட்டு நடக்கக்கூடிய கேட்ப்பார் பிள்ளைகள் என்ற அடிப்படையில் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை செய்கிறார்கள். தலைமைக் கழகத்தில் வைத்து அ.தி.மு.கவுக்கும் பா. ஜ.கவுக்கும் கூட்டணி ஏற்படவில்லை.

ஸ்டார் ஹோட்டலில் வைத்துதான் கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த அளவுக்குதான் அவர்களுடைய சுயமரியாதை உள்ளது. சுயமரியாதை இல்லாத கட்சியாக அ.தி.மு.க மாறிவிட்டது. ஆனால், தி.மு.க கூட்டணி கட்சிகள் அறிவாலயத்திற்கு வருகை தந்து தலைவரை சந்தித்து கூட்டணி குறித்து பேசுகிறார்கள். இங்குதான் கொள்கையும் சுயமரியாதையும் உள்ளது. இதுதான் திராவிட மாடல்.” என்றார்.