`கமல் பேசிய எதுவுமே புரியவில்லை; அதனால்தான் கோவை மக்கள் திருப்பி அனுப்பினார்கள்'- வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் திராவிட மாடல் தோல்வி அடைந்துள்ளது. போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திருச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

வானதி சீனிவாசன்

இந்த பிரச்னையில் தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் மரணங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டை சீரழித்து வருகிறது.

மக்களுக்கான நலத்திட்டங்களை திமுக நிறுத்திவிட்டது. முதலமைச்சர் மீண்டும் ஆட்சி அமைத்துவிடலாம் என்று கனவு கண்டு வருகிறார். ஆனால் அது நடக்காது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது தான் எங்களுடைய கனவு. நான் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கூட்டணி கட்சிகள் அனைவரும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். எங்கள் கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று பணியாற்றி வருகிறோம்.

அண்ணாமலை தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பொறுப்பை மாற்றி கொடுக்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தார். ஊடகங்கள் அதை பூதாகரம் ஆக்கிவிட்டீர்கள். அண்ணாமலை எங்களுடன் சட்டமன்றத்தில் பங்கு பெற வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசிய எதுவும் எனக்கு புரியவில்லை. ஏற்கெனவே கோவை மக்களுக்கு அவருடைய பேச்சு புரியவில்லை என்பதற்காக கடந்த 2021 தேர்தலில் அவரை திருப்பி அனுப்பினார்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.