திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “எங்களது உறுதிமொழியாக 2026 இல் ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும் என்ற கோரிக்கையுடனும், கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்களையும் இங்கே எழுப்பியிருக்கிறோம்.
இந்த ஆண்டு முதல்வர் கூறியது போல், கருத்துக் கணிப்புகள் எல்லாம் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் நாங்கள் வெல்வோம், நாட்டு மக்களுக்காகத் தொடர்ந்து நாங்கள் உழைப்போம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவை யாவும் திமுக முதற்றே உலகு என விஜய் பேசியுள்ளது குறித்து கேட்கிறீர்கள். அது அவர்களின் கட்சி சார்ந்து ஆண்டு விழாவில் அவர்களின் தோழர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசியது.
எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு விமர்சனங்களைத் தொடர்ந்து எங்கள் மேல் வைத்து வந்தாலும் தொடர்ந்து நாங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறோம் என்றால் நாங்கள் வென்றது இடங்களை அல்ல, மக்களின் மனங்களை என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.
மக்களின் மனங்களை வெல்வதற்காக என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டுமோ அந்தப் பணிகளை நாங்கள் செய்வோம். இந்தியா முழுவதும் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கக்கூடிய நிதி என்பது 41 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

16-வது நிதிக்குழுவிலாவது அது சரி செய்யப்படும் என நினைத்தோம். ஆனால், இந்தப் பட்ஜெட்டிலும் 41 சதவிகிதமே தொடர்கிறது என்பது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக, அந்த 41-யும் பிரித்து தரும் பொழுது தமிழ்நாட்டிற்கு வெறும் 4.097 சதவீதம் தான், நாங்கள் கட்டும் வரிப்பணத்திற்குத் திருப்பித் தரப்படுகிறது என்றால் திட்டங்களை எப்படி எங்களால் செயல்படுத்த முடியும்?
நாங்கள் எதிர்பார்த்த மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல பெரிய பெரிய ப்ராஜெக்ட்களுக்கான எந்த நிதியையும் வழங்காமல், குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய 3548 கோடி ரூபாயைப் பற்றி இந்தப் பட்ஜெட்டில் எதுவுமே இல்லை.
சிறப்பாகச் செயல்பட்ட ஜல் ஜீவன் மிஷின் சார்பாக ரூ.3112 கோடி வழங்காமலும், திருச்சியில் உள்ள இரண்டு அமைச்சர்கள் சார்ந்துள்ள துறைக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படாமல் உள்ளது என்றால் இது எப்படிப்பட்ட பட்ஜெட்?
விவசாயிகளாக இருந்தாலும், ஏழை, எளிய மக்களாக இருந்தாலும் எல்லா தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிக்கக் கூடிய ஒரு பட்ஜெட்டாகத்தான் இது அமைந்திருக்கிறது” என்றார்.