இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரமான தோனி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார். அதில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்விற்குப் பிறகு ஏன் வர்ணனையாளராக மாறவில்லை என்பது குறித்து தோனி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டிலும், மற்ற நாடுகளிலும் ஒரு வீரர் ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராக மாறுவது சகஜமான ஒன்று தான். இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தற்போது வர்ணனையாளராக இருந்து வருகின்றனர். உதாரணத்திற்கு ரவி சாஸ்திரி, முரளி கார்த்திக், இர்ஃபான் பதான், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா போன்றவர்களை சொல்லலாம். ஆனால் தோனி கிரிக்கெட் தொடர்பான எந்த ஒரு விஷயங்களிலும் கலந்து கொள்ளாமல் அதில் இருந்து விலகிய இருந்து வருகிறார். இந்நிலையில் அதற்கான காரணத்தையும் தற்போது தெரிவித்துள்ளார்.
Add Zee News as a Preferred Source

அது கடினமான விஷயம்
வர்ணனையாளராக மாறாதது குறித்து பேசி தோனி, வர்ணனை செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்றும், அது மிகவும் கடினமான வேலை என்றும் தெரிவித்துள்ளார். “ஒரு போட்டியை வர்ணனை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. அந்த ஆட்டத்தை வர்ணிப்பதற்கும், களத்தில் உள்ள வீரர்களை விமர்சிப்பதற்கும் ஒரு மிக மெல்லிய கோடு தான் உள்ளது. பல சமயங்களில் நாம் எல்லை மீறி பேசுவது நமக்கு தெரிவதில்லை. என்னை பொறுத்தவரை வர்ணனையாளர் ஒரு போட்டியின் போக்கை மட்டுமே பேச வேண்டும், ஏதாவது தவறு நடந்தால் அவற்றை சுட்டிக் காட்டலாம். ஆனால் அதை எப்படி எவ்வாறு சொல்கிறோம் என்பது தான் முக்கியம். அது ஒரு கலை.
ஒரு அணி ஒரு போட்டியில் தோற்க்கிறது என்றால் அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அந்த காரணங்களை தான் வர்ணனையாளர்கள் விளக்க வேண்டும். ஆனால் அப்படி விளக்கும்போது ஒரு குறிப்பிட்ட வீரர் அல்லது அணியை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவது சரி இல்லை. அப்படி ஒரு உணர்வை ஏற்படுத்தி விடக்கூடாது. யாரையும் காயப்படுத்தாமல் நாகரிகமாக உண்மையை மட்டும் பேசுவது ஒரு பெரிய கலை. அது எல்லோருக்கும் வராது. எனக்கு புள்ளி விவரங்கள் எல்லாம் ஞாபகத்தில் இருக்காது. ஆனால் பல வர்ணனையாளர்கள் அதில் கில்லாடியாக உள்ளனர். இந்திய வீரர்களை பற்றி மட்டும் இல்லாமல், உலக அளவில் உள்ள அனைத்து வீரர்களின் சாதனைகள் மற்றும் புள்ளி விவரங்களை கைநுனியில் வைத்துள்ளார்கள். என்னிடம் அப்படி புள்ளி விவரங்களை கேட்டால் எனக்கு தெரியாது. அப்படி இருக்கும்போது நான் எப்படி மற்றவர்களை பற்றி பேசுவது” என்று தோனி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை 2026
டி20 உலக கோப்பை 2026 தொடர் வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்திய அணி குரூப் ‘ஏ’-வில் அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் பிப்ரவரி 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 15ம் தேதி கொழும்புவில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.
About the Author
RK Spark