தஞ்சாவூர் மாவட்டத்தின் விளை நிலங்களுக்கு போதுமான பாசன வசதியை மேம்படுத்தும் கனவு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது.
1834 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் முதன்முதலாக காவிரி ஆற்றின் குறுக்கே பெரிய அணை கட்டும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக சிந்திக்கத் தொடங்கினார்.
இருபத்து இரண்டு ஆண்டுகள் கழித்து, 1856 இல் மேஜர் லா ஃபோர்டு நெரிஞ்சிப்பேட்டையில் அணை கட்டும் திட்டத்தை முன்மொழிந்தார். ஆனால் பவானி ஆற்றின் பள்ளத்தாக்கு பொருத்தமானது என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு அந்த யோசனையை திரும்பப் பெற்றார்.

பின்னர் ஆய்வுகள், நெரிஞ்சிப்பேட்டை இடத்தில் அணை கட்டியிருந்தால் வெள்ளப்பெருக்கு சமயங்களில் அணை உடைந்து பேரழிவு ஏற்பட்டிருக்கும் எனத் தெளிவுபடுத்தின.
1869 இல் கேப்டன் சி.ஜே. ஸ்மித், ஃபிரேசர் அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டார். பின்னர் மேஜர் மாண்டோமேரி (1880), கேப்டன் ரோமிலி (1883) ஆகியோர் தொடர்ச்சியாக பவானி அணை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆனால் இவை எதுவும் உறுதியான முடிவை எட்டவில்லை. “கர்னல் ஹேஸ்டட்” கூடுதலாக மதிப்பாய்வு செய்தும், அரசு தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை.
1892-ல், கோயம்புத்தூரில் செயற்பொறியாளராக இருந்த ஜே.சி.லார்மினி மீண்டும் ஆய்வைத் தொடர்ந்தார். ஆனால் அவர், ஏற்கனவே காவிரி–வெண்ணார் ஒழுங்குமுறை திட்டம் (1887) இருக்கும் நிலையில், பவானி அணை தேவையா என்ற கேள்வி எழுப்பினார்.
டெல்டா முழுவதும் நன்கு பாசன வசதி
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், தஞ்சாவூர் டெல்டாவுக்கு அதிக நன்மை இல்லை என்றார்.
இதற்கு மாறாக ஹியூஸ் என்ற பொறியாளர், மேலணையில் நீர்மட்டத்தை அளக்கும் கருவி பொருத்தும் யோசனையை முன்வைத்தார்.
அவர், டெல்டாவுக்கு குறைவான நீர் செல்வதாகக் கூறினார். ஆனால் கர்னல் ஸ்மார்ட், அந்த கூற்றை மறுத்து, “காவிரியின் குறுக்கே பெரிய அணை கட்டினால் தஞ்சாவூர் டெல்டா முழுவதும் நன்கு பாசன வசதி பெறும்” என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையில் ஹியூஸ், மணல் படிவு (SILT) காரணமாக நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு குறையும், பயிர் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் பரிசோதனைகள், பவானி மற்றும் அமராவதி ஆற்றின் மண்மாதிரிகள் உரத்தன்மை அதிகமென்று நிரூபித்ததால், ஹியூஸின் கருத்து தவறானது என நிரூபிக்கப்பட்டது.
1901 இல், ஹியூஸும், ஸ்மார்ட்டும் முன்வைத்த திட்டங்கள் இரண்டும் Inspector General of Irrigation பதவியில் இருந்த “ஹிகம்” அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அவர், மணல் படிவு அச்சம் தேவையில்லை என்றும், காவிரியில் அணை கட்டுவது தஞ்சாவூர் டெல்டாவுக்கு பெரும் பலன் தரும் என்றும் உறுதியான பரிந்துரை செய்தார்.
இதனைத் தொடர்ந்து எச்.ஏ. மோஸ் 1904-ல் விரிவான அறிக்கையைத் தயாரித்தார். அவர், 130 அடி உயரம் கொண்ட, 40,000 மில்லியன் கனஅடி கொள்ளளவு உள்ள நீர்த்தேக்கத்தை, நெரிஞ்சிப்பேட்டையிலிருந்து வடக்கே 3 மைல் தூரத்தில் அமைக்க முன்மொழிந்தார்.
மேட்டூர் அணை திட்டங்களும், தடங்களும்…
இந்த திட்டத்தின் அடிப்படையில்:
1. தஞ்சாவூரில் ஏற்கனவே இருந்த 1,60,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை விரிவுபடுத்துதல்.
2. மேலும் 2,16,000 ஏக்கர் நிலங்களைப் புதிதாகச் சேர்த்தல்.
3. நேரடியாக சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலங்களுக்கு நீர் வழங்குதல் மற்றும்,
மொத்த செலவு ரூ. 292.3 லட்சம் என்றும், ஆண்டு நிகர வருவாய் 13 லட்சம் என்றும் மதிப்பிடப்பட்டது.
ஆனால் 1906-ல் அரசு, திட்டத்தில் திருத்தங்களைச் செய்து, டெல்டாவில் பட்டுக்கோட்டை பகுதியை முன்னுரிமை செய்யவும், மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து நேரடி கால்வாய் எடுப்பதை ஒத்திவைக்கவும் உத்தரவிட்டது.

இவ்வாறு, ஆரம்பக் காலத்தில் மேட்டூர் அணை திட்டம் பல தடங்கல்களையும் மாற்றங்களையும் சந்தித்தது. ஆனால் விவசாயிகளின் தேவை, பொறியாளர்களின் ஆய்வு, அரசின் விவாதம் ஆகியவை ஒன்று சேர்ந்து, பின்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைத் திட்டமாக கனவு, நனவாக வழிவகுத்தன.
காவிரி நன்னீர் சிறப்பு
தொடரும்…!