இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மட்டுமல்ல உலக ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரர் தோனி. இவரது ஆளுமை திறன் அனைவரையும் ஈர்த்தது. இவரை பிடிக்காது என சொல்லும் ரசிகர்களே கிடையாது. அப்படிப்பட்ட வீரர் அறிமுகமான நாள் அன்று ஒரு வீரர் அறிமுகமாகி வெறும் 8 போட்டிகளில் மட்டும் விளையாடி கிரிக்கெட்டில் இருந்தே மாயமாகி உள்ளார்.
Add Zee News as a Preferred Source
தோனி – ஜோகிந்தர் சர்மா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ். தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் 2004, டிசம்பர் 23. அவருடன்தான் அறிமுகமானவர் பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா. இவருக்கு பொதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்போது, அஜித் அகர்கர், ஜாகிர் கான், போன்றோர் முக்கிய வேக பந்து வீச்சாளர்களாக இருந்தனர். அதனாலேயே ஜோகிந்தர் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
டி20 போட்டியில் அறிமுகம்
இந்த சூழலில், 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஜோகிந்தர் சர்மா தேர்வானார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேல் ஓரம்கட்டப்பட்டவர், திடீரென ஐசிசி தொடருக்கு தேர்வானது பலரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் ஜோகிந்தர் சர்மா டி20 போட்டிகளில் அறிமுகமானார். அதிலும், அவர் தொடரின் முதல் போட்டியிலேயே எடுக்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் அடித்த அந்த போட்டியில்தான் ஜோகிந்தர் சர்மா சர்வதேச டி20ல் அறிமுகமானார்.
டி20 உலக் கோப்பையை வென்று கொடுத்த ஜோகிந்தர் சர்மா
அத்தொடரில் இந்திய அணிக்கு இரண்டு போட்டிகளை அவரின் அக்ரோஷமான பந்து வீச்சால் வென்று கொடுத்தார். அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் அந்த அணிக்கு 22 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது பந்து வீசிய ஜோகிந்தர் சர்மா, அதிரடி வீரர் மைக்கேல் ஹசி மற்றும் ப்ரெட் லீ விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார்.
இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் கடைசி ஓவரில் அந்த அணிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. கிரீஸில் இருந்த மிஸ்பா-உல்-ஹக் சிக்சர்களை பறக்கவிட்டுக்கொண்டிருந்தார். இந்த சூழலில், பந்து வீச வந்த ஜோகிந்தர் சர்மா, மிஸ்பா-உல்-ஹக் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். அவர் விளையாடிய டி20 போட்டியும் இதுதான்.
6 நாட்கள் மட்டுமே டி20 கிரிக்கெட் வாழ்க்கை
ஜோகிந்தர் சர்மா டி20ல் செப்டம்பர் 19, 2007ல் அறிமுகமானார். செப்டம்பர் 24ல் அவரது கடைசி டி20 போட்டியை விளையாடினார். இடைப்பட்ட அந்த ஒரு வாரம் தான் அவரது டி20 கிரிக்கெட் வாழ்க்கை. ஜோகிந்தர் சம்ரா அவரது வாழ்க்கையில் மொத்தமாக தலா 4 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என மொத்தமாக 8 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும், டி20ல் அவர் விளையாடிய போடிகள் மிகவும் முக்கியமானவை.
ஹரியானா டிஎஸ்பி
ஹரியானாவில் பிறந்த ஜோகிந்தர் சர்மா, அம்மாநில அணிக்காக 77 போட்டிகளில் விளையாடி 297 விக்கெட்களை எடுத்துள்ளார்.தனது கிரிக்கெட் ஓய்வுக்கு பிறகு, அவர் ஹரியானா காவல்துறையில் டிஎஸ்பியாக (DSP) பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.