டி20 உலக கோப்பை வரும் சனிக்கிழமை தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி தங்களது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7ம் தேதி நடக்கும் இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. நியூசிலாந்து தொடரில் சொதப்பிய சஞ்சு சாம்சன் டி20 உலக கோப்பையில் விளையாடுவாரா அல்லது அவருக்கு பதிலாக இஷான் கிஷன் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.
Add Zee News as a Preferred Source

சொதப்பிய சஞ்சு சாம்சன்
நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் சஞ்சு சாம்சன். பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டி20 போட்டியில் சதம் அடித்து இருந்தார். இதனால் தொடர்ந்து டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். இருப்பினும் சஞ்சு சாம்சன் தனது கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று சொல்லலாம். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மொத்தமாக வெறும் 46 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனால் பேக்கப் விக்கெட் கீப்பராக அணிக்குள் வந்த இஷான் கிஷன் அதிரடி காட்டி வருகிறார். சஞ்சு சாம்சன் சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் சதம் அடித்து தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். மேலும் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டார்.
இஷான் கிஷன் பார்ம்!
இந்திய அணியில் தொடர்ந்து வாய்க்கு மறுக்கப்பட்டு வந்த இஷான் கிஷன் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உலக கோப்பை அணியில் நேரடியாக இடம் பிடித்துள்ளார். சையத் முஷ்டாக் அலி டிராபியில் அபாரமாக விளையாடிய இஷான் கிஷன், அந்தப் ஃபார்மை நியூசிலாந்து தொடரிலும் தொடர்ந்தார். ஒரு போட்டியில் 76 ரன்களும், மற்றொரு போட்டியில் 103 ரன்களும் விளாசி, உலகக் கோப்பை அணியில் தனக்கான இடத்தையும், தொடக்க ஆட்டக்காரர் இடத்தையும் உறுதி செய்துவிட்டார். தனக்கு கிடைக்க வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று சொல்லலாம்.

பயிற்சி ஆட்டத்தில் முடிவான பிளேயிங் 11
இந்திய அணி நேற்று நவி மும்பையில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இதில் சஞ்சு சாம்சன் களம் இறக்கப்படவில்லை. ஓப்பனிங் வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் தான் களமிறங்கினர். மூன்றாவது இடத்தில் திலக் வர்மாவும், நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவும் களமிறங்கினர். இதன் மூலம் டி20 உலக கோப்பையில் இந்தியா அணி இப்படித்தான் செயல்பட போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. காயத்திலிருந்து திரும்பிய திலக் வர்மா அதிரடி காட்டி உள்ளார். பயிற்சி ஆட்டத்தில் 19 பந்துகளில் 45 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். மறுபுறம் ஓப்பனிங் வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 20 பந்துகளில் 53 ரன்கள் அடித்துள்ளார். பயிற்சி ஆட்டத்தில் யார் எங்கு வேண்டுமானாலும் களம் இறங்கிக் கொள்ள முடியும். ஆனாலும் கடைசி வரை சஞ்சு சாம்சன் களம் இறக்கப்படவில்லை. அதேபோல விக்கெட் கீப்பராகவும் இஷான் கிஷன் தான் செயல்பட்டார். இதன் மூலம் டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
About the Author
RK Spark