Team India: ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடர் நாளை (பிப்ரவரி 7) தொடங்க உள்ளது. இத்தொடர் இம்முறை இந்தியா மற்றும் இலங்கை மைதானங்களில் நடைபெற இருக்கிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய நிலையில், கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதை இம்முறையும் வென்று தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
Add Zee News as a Preferred Source
டி20 உலகக் கோப்பை 2026
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நாளை முதல் போட்டியை சந்திக்க இருக்கிறது. குரூப் ஏ-வில் இருக்கு இந்தியா அமெரிக்கா அணிக்கு எதிராக முதல் போட்டியை விளையாட இருக்கிறது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதைடுத்து அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட இருக்கும் போட்டிகள், எங்கு நடக்கிறது, எப்போது மற்றும் எதில் பார்க்கலாம் என்ற விவரத்தை தெரிந்துக்கொள்வோம்.
இந்திய அணி குரூப் ஏ பிரிவில் உள்ளது. அந்த பிரிவில் இந்திய அணியுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு அணி தங்கள் பிரிவில் இருக்கும் அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இறுதியில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய அணி போட்டி விவரம்
முதல் போட்டி: இந்தியா vs அமெரிக்கா. இப்போட்டி நாளை (பிப்ரவரி 07) சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
2வது போட்டி: இந்தியா vs நமீபியா. இப்போட்டி பிப்ரவரி 12ஆம் தேதி இரவு 7 மணிக்கு டெல்லியில் இருக்கும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
3வது போட்டி: இந்தியா vs பாகிஸ்தான். இப்போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி, இரவு 7 மணிக்கு இலங்கை, கொழும்புவில் இருக்கும் ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.
4வது போட்டி: இந்தியா vs நெதர்லாந்து. இப்போட்டி பிப்ரவரி 18ஆம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
சூப்பர் 8 சுற்று
பிப்ரவரி 21ஆம் தேதி முதல் சூப்பர் 8 சுற்று தொடங்கும். பிரிக்கப்பட்ட 4 பிரிவுகளில் இருந்தும் தலா 2 அணிகள் இதற்கு தகுதி பெற்று வரும். இதில் அடுத்தடுத்த போட்டிகள் நடத்தப்பட்டு இறுதி போட்டிக்கான அணிகள் தேர்வாகும்.
டி20 உலகக் கோப்பை தொடரை எதில் பார்ப்பது?
இத்தொடரில் இந்திய அணியின் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக பார்க்கலாம். இணையதளம் அல்லது மொபைல் வழியாக என்றால் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்த்து ரசிகளாம்.
இந்திய அணி கோப்பையை வெல்லுமா?
கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் வென்றது. இந்த சூழலில், அதையடுத்து நடைபெற்ற எந்த டி20 தொடரிலும் இந்திய அணி தோல்வியடையவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கூட இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. எனவே இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சொந்த மண்ணில் விளையாடுவதால், இந்திய அணிக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji