தஞ்சாவூர்: ”உதயநிதியை வரவேற்க கொடி கம்பம் அமைக்கும் பணி”- மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சோகம்!

தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் முதல்நிலை ஒப்பந்ததாரரும், திமுகவின் தலைமை பொதுக்குழு உறுப்பினரான சர்க்கரை ஆலை குமார் என்கிற ஜெயக்குமார் இல்ல திருமணம் இன்று நடைபெறுகிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். உதயநிதியை விமர்சையாக வரவேற்கும் விதமாக பல்வேறு எற்பாடுகளை செய்தார் சர்க்கரை ஆலை குமார்.

சர்க்கரை ஆலை குமார் என்கிற ஜெயக்குமார்

இதே போல் ஒப்பந்த அடிப்படையில் சாலையில் இருபுறமும் கொடி மற்றும் தோரணம் அமைக்கும் பணி நடைபெற்றது. சேலத்தை சேர்ந்த பந்தல் அமைப்பு கம்பெனி இதற்கான பணிகளை செய்தது. நேற்று இரவு திருமண மண்டபம் அருகே இரும்பு குழாயில், திமுக கொடி கட்டி அதை ஊன்றும் பணியில் சேலம் மாவட்டம் எட்டிக்குட்டை பகுதியை சேர்ந்த கோகுல் 29, சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த கார்த்தி 45, ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தனர்.

கொடியை 30 அடி உயரம் கொண்ட இரும்பு கம்பியில் கட்டி கம்பத்தை ஊன்றியுள்ளனர். அப்போது உயர் அழுத்த மின்கம்பியில் இரும்பு கம்பம் உரசி மின்சாரம் தாக்கியதில், கோகுல் மற்றும் கார்த்தி இருவரும் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.