சென்னையில் பறவைக் காய்ச்சல்: `சிக்கன் பிரியர்களே உஷார்' – எது பாதுகாப்பு? மருத்துவர் விளக்கம்

சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன.

இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுக் குழுவினர், கடந்த மாதத்தில் சேகரித்து போபாலில் உள்ள தேசிய விலங்குகள் நோய் கட்டுபாட்டு ஆய்வு நிறுவனத்திற்குச் சோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.

இந்தச் சோதனையின் முடிவில் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக அரசு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மருத்துவர் டாக்டர் சாய் சுரேந்தர்
மருத்துவர் டாக்டர் சாய் சுரேந்தர்

இந்த நிலையில், பறவைக்காய்ச்சல் குறித்தும், அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது குறித்தும் விரிவாகப் பேசினார் அவசர சிகிச்சை மருத்துவர் டாக்டர் சாய் சுரேந்தர்.

“தற்போது பரவி வரும் ஏவியன் இன்ஃபுளுயன்சா (Avian Influenza) எனப்படும் பறவைக் காய்ச்சலை H5N1 என்று குறிப்பிடுகிறார்கள். இது தொடர்பாக சென்னையில் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வேளச்சேரி மற்றும் அடையார் ஆகிய மண்டலங்களில் காக்கைகள் உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் இறந்து கிடந்தன.

அவற்றைச் சேகரித்துச் சோதனை செய்தபோது, அவை H5N1 எனும் கொடிய ஏவியன் இன்ஃபுளுயன்சா வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

ஏற்கனவே நாம் H1N1 மற்றும் H2N2 போன்ற வைரஸ்களைப் பார்த்திருக்கிறோம்; தற்போது பரவுவது H5N1 எனும் வகையாகும். இது பெரும்பாலும் பறவைகளிடமிருந்து பறவைகளுக்கே பரவுகிறது. ஆனால், பறவைகள் அதிகளவில் இறந்து கிடக்கும்போது, மனிதர்கள் அவற்றைக் கையால் தொட்டாலோ அல்லது கையாண்டாலோ அரிதாகவே மனிதர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் உள்ளது.

எனவே, உங்கள் பகுதியில் காக்கைகளோ அல்லது கோழிகளோ கொத்துக் கொத்தாக இறந்து கிடந்தால், உடனடியாக அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தப் பறவைகளைச் சோதனை செய்ய வேண்டும்.

பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்

பொதுவாக இந்த வைரஸ் பறவைகளிடையேதான் அதிகம் பரவும். மனிதர்களைப் பொறுத்தவரை, நாம் இறைச்சியை நன்கு சமைத்துச் சாப்பிடுபவர்கள். சிக்கனை அதிக வெப்பத்திலோ அல்லது 100°C கொதி நிலையிலுள்ள நீரிலோ வேகவைக்கும்போது, இந்த வைரஸ் உள்ளிட்ட அனைத்துக் கொடிய கிருமிகளும் அழிந்துவிடும்.

ஆனால், தற்காலத்தில் உடற்பயிற்சி (Gym) மற்றும் உணவுக்கட்டுப்பாட்டில் (Diet) இருப்பவர்கள், சாலட் போன்ற உணவுகளில் இறைச்சியைப் பச்சையாகவோ அல்லது அரைகுறையாகவோ வேகவைத்துச் சாப்பிடுகிறார்கள். மிதமான சுடுநீரில் நீண்ட நேரம் ஊறவைத்தாலும் இந்த வைரஸ் அழியாது. போதிய வெப்பநிலையில் சமைக்காதபோதுதான் இந்த வைரஸ் அழியாமல் மனிதர்களுக்குப் பரவுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், ஏவியன் இன்ஃபுளுயன்சா என்பது ஒரு வைரஸ் (Viral disease). இது பாக்டீரியாவால் ஏற்படுவது அல்ல. இதற்கு எனத் தனியான எதிர்ப்புச் சிகிச்சைகள் (Specific treatment) எதுவும் இல்லை என்பதால், முன்னெச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது.

வீட்டில் கோழி, வாத்து போன்ற பறவைகளை வளர்ப்பவர்கள் என்றால், சில முக்கியமான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோழிகள் வளர்க்கப்படும் இடத்தை பவுல்ட்ரி (Poultry) என்று கூறுவோம்; அந்த இடத்தை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமீபத்தில் நீங்கள் வெளியிலிருந்து புதிய கோழிகளை வாங்கி வந்திருந்தால், அவை சரியாக உணவு உட்கொள்கின்றனவா அல்லது சோர்வாக இருக்கின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.

கோழி
கோழி

ஒருவேளை கோழிகளுக்கு வாந்தி எடுத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக கால்நடை மருத்துவரை (Veterinary Doctor) அழைத்துச் காண்பிக்க வேண்டும்.

ஏனெனில், தற்போது பீகார் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழக அரசின் உணவுத் துறை (Food Department) இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து தீவிர வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே பறவைகள் வளர்ப்பவர்கள் இப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட பறவைகள் இடும் எச்சம் வழியாகவும் மற்ற பறவைகளுக்குப் பரவ வாய்ப்புள்ளது. எனவே, கோழி மற்றும் இதர பறவைகளை வளர்ப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை தற்போது நிலவுகிறது.

உங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தில் ஏதேனும் பறவை இறந்து கிடந்தால், உடனடியாக சுகாதாரத் துறைக்கோ அல்லது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ (Food Safety Officers) தகவல் தெரிவிக்க வேண்டும். மாநகராட்சிக்கு (Corporation) அழைப்பு விடுத்தால்கூட, அவர்கள் உடனடியாக வந்து அந்தப் பறவையை எடுத்துச் சென்று பரிசோதனை செய்வார்கள்.

காகம்
காகம்

அந்தப் பரிசோதனையில் H5N1 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்தப் பகுதியில் உள்ள மற்ற காக்கைகளுக்கும் பிற பறவைகளுக்கும் தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளது என்பதை அறிய முடியும்.

எனவே, உங்கள் பகுதியில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால், தாமதிக்காமல் உடனடியாகத் தகுந்த அதிகாரிகளுக்குத் (Authorities) தெரியப்படுத்தி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா என்ற கேள்விக்கு, தற்போதைய சூழலில் மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனைகளை நடத்தி வருகின்றனர். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, பிரியாணி, கிரில் சிக்கன் அல்லது சில்லி சிக்கன் என எதுவாக இருந்தாலும், அதிக வெப்பத்தில் (High flame) சூடாகத் தயாரிக்கப்படும் உணவுகள் அனைத்தும் பாதுகாப்பானவைதான். எவ்வளவு கொடிய வைரஸாக இருந்தாலும், அந்த வெப்பத்தில் அவை அழிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.

கிரில்டு சிக்கன்
கிரில்டு சிக்கன்

இந்தத் தொற்று எந்த மாதிரியான சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால், இறைச்சியைச் சரியாகச் சமைக்காமல், மிதமான சுடுநீரில் மட்டும் வேகவைத்துச் சலாட் (Salad) போன்ற உணவுகளில் பயன்படுத்தும் போதுதான் ஆபத்து அதிகம். அதேபோல் இறைச்சியைச் சரியாகக் கழுவிச் சுத்தம் செய்யாததும் ஒரு காரணமாக அமைகிறது.

தற்போது ஒரு குறிப்பிட்ட பண்ணையில் கோழிகள் விரைவாக இறந்திருக்கலாம் என்பதால், சில இடங்களில் இறைச்சிக்கு அதிக தள்ளுபடிகள் (Offers) வழங்கப்படலாம். அவ்வாறு வழக்கத்திற்கு மாறாக தள்ளுபடி விலையில் விற்கப்படும் இறைச்சிகளில் தரம் குறைந்த அல்லது பாதிக்கப்பட்ட இறைச்சிகள் இருக்க வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பொதுவாக இந்த வைரஸ் இன்னும் நகரத்தில் பெரிய அளவில் பரவவில்லை. இதுவரை யாருக்கும் பெரிய அறிகுறிகளோ அல்லது பெருந்தொற்று பாதிப்போ ஏற்படவில்லை என்றுதான் தகவல்கள் வருகின்றன. இருப்பினும், அடுத்த இரண்டு வாரங்கள் நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

மருத்துவமனைக்குக் காய்ச்சல், வயிற்று வலி அல்லது வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளுக்குப் பறவைக் காய்ச்சல் (Bird Flu) பாதிப்பு இருக்குமோ என்று மருத்துவர்கள் ஒருமுறை சிந்தித்து, அதற்கேற்பப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

நோய் அறிகுறி
நோய் அறிகுறி

பொதுவாக, சாதாரண காய்ச்சல் என்றால் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொண்டை வலி ஆகியவை ஏற்படும். ஆனால், இந்தப் பறவைக் காய்ச்சலில் (Bird Flu) காய்ச்சலுடன் சேர்த்து உடல் மூட்டுகளில் வலி (Joint pain) மிக அதிகமாக இருக்கும்.

ஆரம்பத்தில் இது சாதாரண வைரஸ் தொற்று (Viral infection) போலவே தோன்றும். ஆனால், சிலருக்கு இதன் பாதிப்பு மிகவும் தீவிரமாக இருக்கும். குறிப்பாக, ஏற்கனவே புற்றுநோய் (Cancer) பாதிப்பு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், சர்க்கரை நோய் (Diabetes), காசநோய் (TB) உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

சிலருக்குக் காய்ச்சல் மிகத் தீவிரமான நிலைக்கு (High grade fever) செல்லக்கூடும். அத்துடன் மூச்சுத் திணறல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கும் காசநோயாளிகளுக்கும் இது நுரையீரலில் அதிக பாதிப்புகளை உண்டாக்கும்.

பொதுவாக அனைத்து வைரஸ் தொற்றுகளும் காய்ச்சலில் தொடங்கி, பின் உடல் வலிக்கு பரவும். அதன் பிறகு பசியின்மை மற்றும் வாந்தி போன்ற உணர்வுகள் ஏற்படும். ஆனால், பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதலாக வயிற்றுப்போக்கும் (Loose motion) ஏற்பட வாய்ப்புள்ளது.

வீட்டு மருந்து
வீட்டு மருந்து

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் நீங்களாகவே சுய மருத்துவம் (Self-medication) செய்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, நீங்கள் வெளியில் சென்று சிக்கன் போன்ற இறைச்சிகளைச் சாப்பிட்ட பிறகு இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும்.

தற்போது கோடைக்காலம் தொடங்கி வரும் வேளையில், H5N1 வகை பறவைக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதால், பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது மிகுந்த ஆபத்தானது. தவிர்க்க முடியாத சூழலில் பறவைகளைக் கையாள வேண்டியிருந்தால், போதிய பாதுகாப்பு வசதிகளுடன் இருப்பது அவசியம்.

பறவைகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் (Mask) மற்றும் கையுறைகளை (Gloves) அணிய வேண்டும். பறவைகளுடனான வேலையை முடித்த பிறகு, சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளையும் உடலையும் நன்கு சுத்தம் செய்து, தனிநபர் சுகாதாரத்தைப் (Personal hygiene) பேண வேண்டும்.

இறைச்சிக் கடை
இறைச்சிக் கடை

குறிப்பாக, இறைச்சிக் கடைகளில் வேலை செய்பவர்கள் அல்லது பண்ணைகளில் இருப்பவர்கள், தங்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவி, தங்களை முழுமையாகச் சுத்தப்படுத்திக் கொண்ட பின்னரே (Sterilize) வீட்டிற்குள் செல்ல வேண்டும். ஏனெனில், இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவாது என்று கூற முடியாது.

இந்தத் தொற்று 99% பறவைகளிடமிருந்து பறவைகளுக்கே பரவுகிறது என்றாலும், 1% மனிதர்களுக்குப் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு மனிதர்களுக்குப் பரவத் தொடங்கினால், அந்த வைரஸின் வீரியம் அதிகரித்து, அது ஒரு பெருந்தொற்றாக மாறுவதற்கான அபாயம் இருக்கிறது. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் இந்தச் சூழலில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாகக் குழந்தைகள் பீட்சா, பர்கர் மற்றும் ஃபிரைடு சிக்கன் (Fried Chicken) போன்ற உணவுகளை விரும்பி உண்ணுவர். பொதுவாக, ஃபிரைடு சிக்கன் தயாரிக்கும்போது அதிக வெப்பநிலையில் எண்ணெய்யில் பொறிக்கப்படுவதால் பெரிய பாதிப்பு இருக்காது.

இருப்பினும், சில உணவகங்களில் இறைச்சி நேற்றையதா அல்லது இன்றையதா என்பது நமக்குத் தெரியாது. சில இடங்களில் இறைச்சியைச் சரியாகச் சமைக்காமலும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, பிரியாணி அல்லது ஃபிரைடு சிக்கன் போன்ற உணவுகளை கடைகளில் வாங்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முதியவர்கள்
முதியவர்கள்

சிக்கன் என்பது நம் உடலுக்குத் தேவையான ஒரு சிறந்த புரதச் சத்து (Protein) என்றாலும், அது இயற்கையாகவே உடலில் வெப்பத்தை உண்டாக்கும் தன்மை கொண்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போது விற்கப்படும் கோழிகளில் எவை நோயுற்றவை, எவை ஆரோக்கியமானவை என்பதை நம்மால் கண்டறிய முடியாது.

எனவே, பாதுகாப்பைக் கருதி இந்தச் சூழலில் கோழி இறைச்சியைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக கடல் உணவுகளுக்கு மாறுவது மிகவும் சிறந்த முடிவாக இருக்கும்.

பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, பொதுவாகச் சீசனல் ஃப்ளூ (Seasonal Flu) மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கான (Swine Flu) தடுப்பூசிகள் இருக்கின்றன. ஆனால், தற்போது பரவி வரும் இந்தப் பறவைக் காய்ச்சலுக்கு (H5N1) என்று பிரத்யேகமாக எந்தத் தடுப்பூசியும் இன்னும் கண்டறியப்படவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, Fluquadri, Influvac, Vaxiflu போன்ற இன்ஃபுளுயன்சா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் ‘இன்ஃப்ளூவேக்’ என்பது செயலிழக்கச் செய்யப்பட்ட வைரஸைக் கொண்டு தயாரிக்கப்படும் தடுப்பூசியாகும். இவை தற்போது பல இடங்களில் கிடைப்பினும், இவை பறவைக் காய்ச்சலுக்கு எந்த அளவிற்குப் பலன் அளிக்கும் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.

தடுப்பூசி
தடுப்பூசி

ஏனெனில், இன்ஃபுளுயன்சா என்பது ஒரு பெரிய வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது. அதில் H1N1 முதல் தற்போதுள்ள H5N1 வரை பல வகைகள் உள்ளன. எனவே, தற்போதைய சூழலில் நீங்களாகவே எந்தத் தடுப்பூசியையும் தேடிப் போடக்கூடாது. அதேபோல் சுய மருத்துவமும் (Self-medication) செய்துகொள்ளக்கூடாது.

பறவைக் காய்ச்சல் குறித்த அச்சம் அல்லது அறிகுறிகள் இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதுதான் மிகச்சிறந்த வழிமுறை என்பது எனது அறிவுரை ஆகும்.

பறவைக் காய்ச்சலைக் கண்டறிய H5N1 பரிசோதனை செய்யப்பட வேண்டும். இதற்கான பிரத்யேகப் பரிசோதனை மையங்கள் சில இடங்களில் மட்டுமே உள்ளன. அங்கு உங்கள் மாதிரிகளை (Samples) அனுப்பி பரிசோதித்து, ஒருவேளை தொற்று உறுதியானால், கொரோனா காலத்தில் செய்தது போலப் பாதிக்கப்பட்டவர் உடனடியாகத் தனிமைப்படுத்தப்படுவார். (Isolation). வைரஸின் வீரியம் குறையும் வரை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.

இந்த நோயால் உயிரிழப்பு ஏற்படுவது மிகவும் அரிதுதான் என்றாலும், இது அதிகப்படியான காய்ச்சலையும் மூட்டு வலியையும் உண்டாக்கும் என்பதால், நீங்களாகவே வீட்டில் சிகிச்சை எடுப்பதைத் தவிர்த்து, முறையான மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதே பாதுகாப்பானது.

மருத்துவரை அணுக வேண்டும்
மருத்துவரை அணுக வேண்டும்

இக்கட்டான சூழலைத் தவிர்க்க நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய சில முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்கின்றன.

  • உங்கள் பகுதியில் பறவைகள் இறந்து கிடந்தால், தாமதிக்காமல் உடனே சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

  • கோழி, வாத்து போன்ற பறவைகளை வளர்ப்பவர்கள் இந்தச் சீசனில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • போதிய சுகாதாரமில்லாத மற்றும் இறைச்சியைச் சரியாக வேகவைக்காத உணவகங்களில் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தற்போதைய சூழலில், சில காலம் சிக்கன் உணவுகளைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.

  • ஒருவேளை வீட்டில் சமைப்பதாக இருந்தால், அந்த இறைச்சி எங்கிருந்து வருகிறது, தரமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 100°C-க்கும் அதிகமான வெப்பநிலையில் நன்கு கொதிக்க வைத்துச் சமைத்தால் எந்த வைரஸும் அதில் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை.

  • எதற்கும் பாதுகாப்பு கருதி, அடுத்த இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை கோழி மற்றும் வாத்து இறைச்சி உண்பதைத் தவிர்ப்பது மிகச்சிறந்த முடிவாகும்” என்கிறார் டாக்டர் சாய் சுரேந்தர்.

எதையும் அறிந்து கொண்டு விழிப்புணர்வோடு இருப்பது நல்லது. நாமும் தெரிந்து கொள்வோம், நமக்கு தெரிந்தவர்களுக்கும் தெரிய வைப்போம்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.