அவள் விகடன் சக்தி மசாலாவுடன் இணைந்து வழங்கும் `சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3’ விழுப்புரம் ஹமித்ரா மஹாலில் பிரம்மாண்டமாக தொடங்கியது.
`உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை!’ என்ற தலைப்பில் புதுச்சேரி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு உள்ளிட்ட 13 பகுதிகளில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று, சென்னையில் நடைபெற இருக்கிறது.
விழுப்புரத்தில் இன்று தொடங்கியிருக்கும் நிகழ்ச்சியில் விழுப்புரம், அரசூர், கோலியனூர், வளவனூர், செஞ்சி, உளுந்தூர்பேட்டை பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மொத்தம் இரண்டு சுற்றுகளாக நடைபெறும் இந்தப்போட்டியின் முதல் சுற்றில், போட்டியாளர்கள் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்த உணவை காட்சிப்படுத்துவார்கள்.
போட்டியின் நடுவர் பிரபல யுடியூபர் மற்றும் சமையல்கலை வல்லுநரான செஃப் தீனா, அவர்களில் அவர்களில் சிறப்பாக பங்காற்றியவர்ளை தேர்வு செய்வார். அவர்கள் அங்கேயே நடைபெறும் `லைவ் கிச்சன் சமையல்’ பிரிவுக்கு அனுப்பப்படுவார்கள்.
அதில் தேர்வாகும் போட்டியாளர்கள் சென்னையில் நடைபெறும் இறுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்கள். அவள் விகடனுடன் கோல்டு வின்னர், சத்யா, நாகா, எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், RKG நெய், மெரிபா பனீர், லலிதா ஜூவல்லரி, விகடன் ப்ளே, ஆஸ்கார் டி.வி போன்றவை இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் விதவிதமான உணவுகளை சமைத்து வந்து அசத்தினர்.
சப்பாத்திக்கள்ளி பழ மிட்டாய், நவதானிய புலாவ், ரத்தசாலி அரிசி கொழுக்கட்டை, ரத்தசாலி அரிசி புட்டு, தூதுவளை, முடக்கத்தான் முசுமுசுக்கை இலை பணியாரம், மாசி கருவாடு தொக்கு என விதவிதமாக சமைத்த்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை சாப்பிட்டுப் பார்த்த செஃப் தீனா, அதன் ரெசிப்பிக்களை கேட்டு தெரிந்து கொண்டார்.

அதேபோல, காயல்பட்டினம் ஓட்டு மாவு, பாசிப்பருப்பு அல்வா, முள்ளங்கி கோலா உருண்டை, உண்ணிப்பூ பாயாசம், மூங்கில் குருத்து குழம்பு, நஞ்சிக்கொட்டான் ரோல், பனை கிழங்கு மற்றும் முருங்கைப்பூ உருண்டை, நரி பயிறு துவையல், கண்டதிப்பிலி சதகுப்பை ரசம், பப்பாளிக்காய் பொடிமாஸ், முருங்கைக்கீரை பிஸ்கட், கேக் மற்றும் சாக்லெட், ராகி ப்ரௌனி, பிரண்டை குழம்பு, எட்டு வகை அரிசி லட்டு, கருப்பு கவுனி அரிசி வட்டிலாப்பம், எள்ளு இட்லி, பிரண்டை வத்தல் போன்ற பாரம்பர்ய மற்றும் சிறுதானிய வகைகளைக் கொண்டு எண்ணற்ற உணவு வகைகளை காட்சிப்படுத்தி அசத்தினர்.
நாளை 08.02.2026 அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் புதுச்சேரியில் நடைபெற இருக்கிறது.