இந்திய அணியில் விளையாட தடை? என்ன செய்வார் வைபவ் சூர்யவன்ஷி?

இந்தியாவை மட்டும் இன்றி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமான இவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய U19 அணியில் இடம் பிடித்தார். ஆசிய கோப்பையில் அதிரடி காட்டிய இவருக்கு, U19 ஒருநாள் உலகக்கோப்பை போட்டியிலும் ஓப்பனிங் வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைத்தது. அதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டு, 14 வயதில் உலகையே தன்னை திரும்பி பார்க்க வைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்துள்ளார். வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் அடித்து இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய U19 அணி உலக கோப்பையை வெல்ல உதவினார். ஐபிஎல்லில் முதல் முதலில் சதம் அடித்த இவர் தற்போது, தான் விளையாடிய அனைத்து பார்மெட்டுகளிலும் சதம் அடித்து அசத்தி வருகிறார். இவ்வளவு சிறப்பாக விளையாடியும் அவர் ஏன் இன்னும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது பலருக்கும் கேள்வியாக இருந்து வருகிறது. 

Add Zee News as a Preferred Source

ஐசிசியின் விதிமுறை 

14 வயதே ஆகும் வைபவ் சூர்யவன்ஷிக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும், ஐசிசி விதிமுறை அவருக்கு ஒரு தடையாக இருந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிப்படி ஒரு வீரர் ஒரு நாட்டின் சர்வதேச அணிக்காக விளையாட வேண்டும் என்றால், அவரின் வயது குறைந்தபட்சம் 15 வயதாக இருக்க வேண்டும். கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதி, இளம் வீரர்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டது. வைபவ் சூர்யவன்ஷி 2011 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி பிறந்துள்ளார். ஐசிசியின் விதிமுறையின்படி அவர் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு தான் இந்திய அணியில் விளையாடும் தகுதியை பெறுவார். அதனால் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலக கோப்பையில் அவர் இடம் பெறவில்லை. 

2030 U19 உலக கோப்பையில் விளையாட முடியுமா? 

தற்போது தனது 14 வயதிலேயே U19 உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடி உள்ள வைபவ் சூர்யவன்ஷி 2030 ஆம் ஆண்டு நடைபெறும் U19 உலக கோப்பையில் விளையாட தகுதியானவர் தான். ஆனாலும் அவரால் மீண்டும் U19 உலக கோப்பை அணியில் இடம் பெற முடியாது. பிசிசிஐ வைத்துள்ள விதிகளின்படி, ஒரே ஒரு முறை மட்டுமே U19 உலக கோப்பையில் விளையாட முடியும். புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்கவும், ஒரே வீரர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்கவும் தான் பிசிசிஐ இந்த விதிமுறைகளை கொண்டு வந்தது. எனவே வைபவ் சூர்யவன்ஷி U19 உலக கோப்பையில் மீண்டும் விளையாட தகுதி பெற்று இருந்தாலும் அவரால் விளையாட முடியாது. 

வைபவ் சூர்யவன்ஷி எதிர்காலம் 

வைபவ் சூர்யவன்ஷி அடுத்ததாக இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் மற்ற உள்நாட்டு தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார். இந்நிலையில் அவருக்கு சீனியர் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்று பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 16 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமானார். வைபவ் சூர்யவன்ஷி தன்னுடைய 15 வயதிலேயே இந்திய அணிக்கு அறிமுகம் ஆவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வைபவ் சூர்யவன்ஷி சாதனைகள்

உலக கோப்பை சதம்: U 19 இறுதி போட்டியில் 80 பந்துகளில் 175 ரன்கள் அடித்தார். இதுவே ஒரு உலக சாதனை.

சிக்சர் மழை: 2026 உலக கோப்பையில் மட்டும் 30 சிக்சர்கள் விளாசி, முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளார்.

ஐபிஎல் சாதனை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 35 பந்துகளில் சதமடித்து, மிக இளம் வயதில் ஐபிஎல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ஏபி டிவிலியர்ஸ் சாதனை: விஜய் ஹசாரே டிராபியில் வெறும் 59 பந்துகளில் 150 ரன்கள் குவித்து, ஏபி டிவிலியர்ஸின் சாதனையை முறியடித்தார்.

லிஸ்ட்-ஏ கிரிக்கெட்: 14 வயதிலேயே லிஸ்ட்-ஏ போட்டியில் சதம் அடித்த உலகின் மிக இளம் வீரர் இவரே.

 

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.