சென்னையில் இன்று ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் இல்லத் திருமண விழா நடந்தது. காலையில் இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியுடன் கலந்து கொள்ள, மாலையில் கிறிஸ்தவ முறைப்படி நடந்த வரவேற்பில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கலந்து கொண்டுள்ளார்.
மணமகன் சாஹில் ஜெகன் மோகனின் சகோதரரான சுனில் ரெட்டியின் மகன். மணமகள் வேதிகா காரைக்குடி பிசினஸ் குழுமமான முருகப்பா குடும்பத்தைச் சேர்ந்த அருண் முருகப்பன் – சிகப்பி தம்பதியின் மகள்.
காதல் திருமணம் என்பதால் இருவீட்டாரின் குடும்ப மரபுப்படி திருமணம் செய்ய விரும்பினார்களாம்.

எனவே காலையில் மணமகள் வீட்டாரின் விருப்பப்படி இந்து செட்டிநாட்டு முறைப்படி நடந்திருக்கிறது திருமணம். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுடன் கலந்து கொண்டார். தவிர சினிமா நடிகர் நடிகைகள் சிலரும் கூட திருமணத்தில் கலந்து கொண்டனர்.
மாலை கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெற்றது.
இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். முதல்வர் முதலில் வரவேற்பில் கலந்து கொள்ளவே திட்டமிட்டிருந்ததாகவும் விஜய் அதில் கலந்து கொள்ள இருப்பது அறிந்தே அதை மாற்றியதாகவும் சொல்கிறார்கள் சிலர்.
இந்த திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.