இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் முதலில் டி20 உலக கோப்பை அணி இடம் பெறவில்லை. 15 பேர் கொண்ட அணியில் ஹர்ஷித் ராணா தான் இடம் பெற்று இருந்தார். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி இருந்தார் ஹர்ஷித் ராணா. ஆனால் அவருக்கு ஏற்பட்ட திடீர் காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் இருந்து விலகினார். இந்நிலையில் அவருக்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்ட முகமது சிராஜ், அமெரிக்காவிற்கு எதிரான டி20 உலக கோப்பையில், 4 ஓவர்களில் வெறும் 29 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில் அவர் எப்படி இந்திய அணியில் கடைசி நேரத்தில் இணைந்தார் என்பதை பற்றிய சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Add Zee News as a Preferred Source

சூரியகுமார் யாதவ் போன் கால்!
கடைசியாக இந்திய ஒரு நாள் அணியில் விளையாடிய முகமது சிராஜ், உள்ளூர் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தார். ஐபிஎல் வரை ஓய்வில் இருக்கலாம் என்று நினைத்த அவருக்கு டி20 உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்க அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய முகமது சிராஜ், “சூர்யா குமார் யாதவ் எனக்கு போன் செய்தார். துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்பி வா என்றார். நான் அவரிடம் சூர்யா பாய் தயவு செஞ்சு விளையாடாதீங்க. இது நடக்காத காரியம் என்றேன். ஆனால் அவர் நான் உண்மையைத்தான் சொல்கிறேன். உடனே கிளம்பு என்றார். அவர் போனை வைத்த அடுத்த நொடியே பிரக்யான் ஓஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது தான் இது உண்மை என்று நான் நம்பினேன்” என்று சிராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் தொடர்!
பிப்ரவரி 6ம் தேதி வரை ஹைதராபாத்தில் ரஞ்சி அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த சிராஜ், அடுத்த நாள் பிப்ரவரி 7ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவிற்காக டி20 உலக கோப்பையில் விளையாடினார். கடந்த ஓராண்டு காலமாக டி20 போட்டிகளில் விளையாடாத சிராஜிற்கு, நேராக டி20 உலக கோப்பை அணியில் இடம் பிடித்தது ஒரு கனவு போல இருந்தது என்று தெரிவித்துள்ளார். “பிளைட்டில் நான் ஏறும் வரை என்னால் இதனை நம்பவே முடியவில்லை. கடவுள் எழுதியதை யாராலும் மாற்ற முடியாது. நான் வந்து இங்கு வந்து விளையாட வேண்டும் என்று விதி” என்று சிராஜ் தெரிவித்துள்ளார்.
பவுலிங்கில் மிரட்டிய சிராஜ்!
எந்தவிதமான பயிற்சி இல்லாமல் நேரடியாக களத்தில் இறங்கிய சிராஜ் சிறப்பாக பந்து வீசி இருந்தார். பவர் பிளேயில் 2 விக்கெட்களையும், டெத் ஓவரில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். பும்ராவிற்கு திடீரென உடல் நிலையில் ஏற்பட்ட குறைபாட்டால் சிராஜிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். “ரியல் மாட்ரிட் போட்டியை பார்க்கப் போக முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, நாட்டுக்காக உலக கோப்பையில் விளையாடுவது அதைவிட பெரிய கனவு. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவுக்காக விளையாடி வருகிறேன். எனவே எந்த நேரத்திலும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி தயாராக வேண்டும் என்று எனக்கு தெரியும். ரஞ்சி டிராபியில் என்ன லைன் & லென்த்தில் வீசினேனோ, அதையே இங்கேயும் வீசினேன். அது ஒர்க்-அவுட் ஆனது” என்று சிராஜ் தெரிவித்துள்ளார்.
About the Author
RK Spark