நெல்லை: மருத்துவ அறிவுரையை மீறி வீட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த நபர்; வயிற்றிலேயே இறந்த குழந்தை!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நசீம் உசேன். இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, முகம்மது அஸ்மா. கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஸ்மாவுக்கு, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உசேன் இயற்கை மருத்துவத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், அதனால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அறிவுரைகளை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நசீம் உசேன்

இந்த நிலையில், உசேனின் மனைவி அஸ்மாவிற்கு கடந்த 6-ம் தேதி பிரசவவலி ஏற்பட்டுள்ளதாம். மருத்துவமனைக்கு தன் மனைவியை அழைத்துச் செல்லாமல்,  உசேன் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்துள்ளாராம். ஆனால், அவர் பார்த்த பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை, இறந்து வெளியே வந்திருக்கிறது. இந்தச் சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க, இரவோடு இரவாக குழந்தையின் சடலத்தை புதைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் பரவ மேலப்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கணவன் –மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம், “நசீம் உசேன் – அஸ்மா தம்பதிக்கு ஏற்கெனவே இரண்டு முறை கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி, `எங்களுக்கு ஆங்கில மருத்துவம் மற்றும் பரிசோதனையில் உடன்பாடு இல்லை’ என நெல்லை மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு கடிதமாக கொடுத்துள்ளனர்.

மேலப்பாளையம் காவல் நிலையம்

இருவருக்கும் மாநகர நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டது. குறிப்பாக, பிரசவத்திற்கு 3 நாட்கள் முன்புகூட அவரிடம் அனைத்து துறை அதிகாரிகள் பேசியுள்ளார்கள். ஆனால், இயற்கை மருத்துவம் மீது தனக்கு அதீத நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார். வீட்டில் இருந்தே பிரசவம் பார்த்ததுடன் அப்பாவி சிசுவைக் கொன்ற கணவன், மனைவி ஆகிய இருவர் மீதும் பி.என்.எஸ் 91,94 ஆகிய பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிவு 91-ன் படி 10 ஆண்டுகள் சிறை தண்டணையும், சிசுவின் சடலத்தை புதைத்த குற்றத்திற்காக பிரிவு 94-ன் படி கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டணையும் கிடைக்கக்கூடும்” என்றனர்.     

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.