பிளேயிங் 11ல் வாஷிங்டன் சுந்தர்! நீக்கப்படும் முக்கிய வீரர் – சூர்யகுமார் அப்டேட்!

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்புச் சாம்பியனான இந்திய அணி தங்களது முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார். போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சூரியகுமார் யாதவ், அணியில் உள்ள வீரர்களின் காயம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் எப்போது அணிக்கு திரும்புவோர் என்பதை பற்றி தெரிவித்துள்ளார். 

Add Zee News as a Preferred Source

இந்திய அணியில் இணையும் வாஷிங்டன் சுந்தர் 

காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தருக்கு என்ன ஆனது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறுவாரா அல்லது மாற்று வீரர் அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் டெல்லியில் நடைபெறும் நமிபியாவிற்கு எதிரான போட்டிக்கு முன்பு இந்திய அணி இணைவார் என்று சூரியகுமார் யாதவ்  தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் நமிபியா அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி வரும் 12ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் 11ல் இடம் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லி ஆடுகளம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. தற்போது இந்திய அணியில் அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இரண்டு ஸ்பின்னர்கள் மட்டுமே விளையாடுகின்றனர். வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வந்தால் ஒரு பேட்டரை இழக்க நேரிடும். அது ரிங்கு சிங்காக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. காரணம் வாஷிங்டன் சுந்தரம் இடது கை பேட்டிகளில் இந்திய அணிக்கு கை கொடுக்க முடியும் என்பதால் ரிங்கு சிங் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அன்றை பிட்சின் நிலைமையை பொருத்துதான் இறுதி முடிவு எடுக்கப்படும். 

பும்ரா மற்றும் அபிஷேக் ஷர்மா 

அமெரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விளையாட வில்லை. அவருக்கு பதிலாக சிராஜ் இடம்பெற்று சிறப்பாக பந்து வீசி இருந்தார். காய்ச்சல் காரணமாக பும்ரா இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் ஆவது பும்ரா இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு  நிலவுகிறது. காரணம் வரும் 15ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி உள்ளதால், அதற்கு முன்பு ஒரு போட்டியில் ஆவது விளையாடினால் நன்றாக இருக்கும். அதே போல அபிஷேக் சர்மாவிற்கும் காய்ச்சல் என்று கூறப்படுகிறது. முதல் போட்டியிலும் 100 டிகிரி காய்ச்சலுடன் பேட்டிங் செய்தார் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கும் காய்ச்சல் சரியாகவில்லை என்றால் சஞ்சு சாம்சன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

சூர்யகுமாரின் தனிநபர் போராட்டம்

அமெரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அமெரிக்க பந்துவீச்சாளர்களிடம் திணறியது. இஷன் கிஷன் (5), அபிஷேக் சர்மா (9), திலக் வர்மா (11) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி ஒரு கட்டத்தில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த இக்கட்டான நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனி ஆளாக போராடினார். 49 பந்துகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி 161 ரன்கள் அடித்தது. பின்னர் களமிறங்கிய அமெரிக்க அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. நமீபியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் அணிக்கு திரும்புவது, இந்திய அணியின் பலத்தை மேலும் வலுப்படுத்தும்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.