விண்வெளிப் போரில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளும் சீனா; அசரவைக்கும் புதிய மைக்ரோவேவ் தொழில்நுட்பம்!

விண்வெளிப் பாதுகாப்புத் துறையில் சீனா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. எலான் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ போன்ற செயற்கைக்கோள் கூட்டமைப்புகளை செயலிழக்கச் செய்யும் வகையில், ஒரு சக்திவாய்ந்த ‘மைக்ரோவேவ் ஆயுதத்தை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பம் விண்வெளியில் எந்தவிதமான குப்பைகளையும் (Space Debris) உருவாக்காமல், இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அவற்றின் மின்னணு பாகங்களைச் சிதைக்கும் வல்லமை கொண்டது.

சீனாவின் வடமேற்கு அணுசக்தி தொழில்நுட்ப நிறுவனத்தைச் (NINT) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகிலேயே மிகச்சிறிய மைக்ரோவேவ் டிரைவர் ஒன்றை உருவாக்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.

TPG1000Cs என்று அழைக்கப்படும் இந்தச் சாதனம் சுமார் நான்கு மீட்டர் நீளமும், ஐந்து டன் எடையும் கொண்டது. இது நிலத்திலிருந்து 20 ஜிகாவாட் அளவுள்ள மின் துடிப்புகளை விண்வெளியை நோக்கிப் பாய்ச்சும் திறன் கொண்டது. வழக்கமாக ஒரு செயற்கைக்கோளைச் செயலிழக்கச் செய்ய 1 ஜிகாவாட் சக்தியே போதுமானது எனும் நிலையில், சீனாவின் இந்த ஆயுதம் அதன் தேவையை விடப் பல மடங்கு அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது.

இந்த ஆயுதத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இது ஒரு நிமிடம் வரை தொடர்ந்து செயல்படக்கூடியது. இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட பல மைக்ரோவேவ் ஆயுதங்கள் சில நொடிகள் மட்டுமே செயல்படும் திறன் கொண்டிருந்தன.

AI – Generated image

‘மிடல் 7131’ (Midel 7131) என்ற சிறப்பு திரவ மின்சுற்றுப் பொருளைப் பயன்படுத்தியதன் மூலம், இந்த ஆயுதத்தின் அளவைக் குறைத்து அதன் சக்தியை அதிகரிக்க முடிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது போர்க்களத்தில் வாகனங்களில் ஏற்றிச் சென்று பயன்படுத்தும் அளவிற்கு எளிய வடிவில் மாற்றப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உக்ரைன் போரில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் ஆற்றிய முக்கியப் பங்கு, இத்தகைய பெரிய செயற்கைக்கோள் கூட்டமைப்புகளைச் சிதைப்பதற்கான ஆயுதங்களை உருவாக்கச் சீனாவைத் தூண்டியுள்ளது.

AI – Generated image

விண்வெளியில் ஏவுகணைகளை ஏவிச் செயற்கைக்கோள்களைத் தகர்த்தால், அது விண்வெளிக் குப்பைகளை உருவாக்கி மற்ற செயற்கைக்கோள்களையும் பாதிக்கும். ஆனால், இந்த மைக்ரோவேவ் ஆயுதம் எவ்விதக் குப்பையையும் உருவாக்காமல் மின்னணுப் போர் முறையில் இலக்கை மட்டும் அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.