29 தொகுதிகள்; 60 நாள்கள்! – கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் தவெக | கோவை பொதுக்கூட்டம் ஹைலைட்ஸ்

கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். குறிப்பிட்ட நேரத்தை விட மிகவும் தாமதமாகத்தான் பொதுக்கூட்டம் தொடங்கியது.

கோவை தவெக பொதுக்கூட்டம்
கோவை தவெக பொதுக்கூட்டம்

இந்த நிகழ்வுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களில் செங்கோட்டையன் புகைப்படம் இடம்பெறவில்லை. கோபிசெட்டிப்பாளையத்தில் நடந்த மற்றொரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, செங்கோட்டையன் முதல் ஆளாக பேசி புறப்பட்டார்.

உண்மையான அரசியல் எழுச்சி

செங்கோட்டையன் பேசும்போது, “இந்த கூட்டம் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கூட்டம் கூட்டும் அரசியலுக்கு மாறாக, ஒரு ரூபாய் செலவில்லாமல் மக்கள் தன்னெழுச்சியாக திரண்டது உண்மையான அரசியல் எழுச்சியைக் காட்டுகிறது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

கொங்கு மண்டலத்தில்  29 தொகுதிகள் உள்ளன. இந்த 29 தொகுதிகளிலும் வெற்றி கனியை பறித்து தளபதி காலடியில் சமர்ப்பிப்பதுதான் நம் லட்சியம்” என்றார்.

இறுதிகட்டத்தை எட்டிவிட்டோம்

ஆதவ் அர்ஜுனா பேசும்போது, “இறுதிகட்டத்தை எட்டிவிட்டோம். நமக்கும், திமுகவுக்கும் தான் போட்டி. அதிமுக பற்றி கவலைப்பட வேண்டாம். தவெக 27 சதவீத வாக்கு விகிதத்தை கடந்து, தற்போது 30 சதவீத வாக்கு வங்கியில் நிற்கிறது.

தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

2021 தேர்தலிலேயே கொங்கு மக்கள் திமுகவைப்பற்றி புரிந்து வைத்து அவர்களுக்கு ஓட்டு போடவில்லை. கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து வந்து பணியாற்றுவது எல்லாம் எடுபடாது” என்றார்.

புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், “கோவையில் சிறுவாணி தண்ணீருக்கு தனி சுவை இருப்பதைப் போல, இந்த மக்கள் அரசியலையும் தனித்துவமாக அணுகுகிறார்கள். கோவை மண்டலம்  தமிழக அரசியலில் கோட்டையின் சாவி போன்றது.

pussi ananth

அந்தச் சாவியைச் சரியான தலைமையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. கொங்கு மண்டலம் தளபதியின் கோட்டையாக மாறும். நம்  தலைவரை முதல்வராக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.