டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று (பிப்ரவரி 11) காலை 11 மணி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டி மிகவும் சவாரஸ்யமாக இறுதி வரை பரபரப்பான சூழலில் சென்றது.
Add Zee News as a Preferred Source
டாஸை வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம், 5 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின் டி காக் மற்றும் ரியான் ரிக்கில்டன் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இருவரும் அரைசதம் கடந்த பின்னரே களத்தை விட்டு வெளியேறினர். டி காக் 59 ரன்களிலும் ரியான் ரிக்கில்டன் 61 ரன்களிலும் வெளியேறினர்.
குர்பாஸ் அசத்தல்
20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கிய நிலையில், களத்தில் தொடர்ச்சியாக நின்று ரஹ்மத்துல்லா குர்பாஸ் ரன்களை குவித்தார். மறுபக்கம் இப்ராஹிம் சத்ரான் 12, குல்பதீன் 0, செடிகுல்லா அடல் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், குர்பாஸ் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் விளாசினார்.
இறுதி வரை பரபரப்பு
அவரை அடுத்து ரஷித் கான் மற்றும் அஸ்மதுல்லா உமர்சாய் ரன்களை சேர்த்து இலக்கை நெருங்கினர். ஆனால் எதிர்பாராத விதமாக ரஷித் கான் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் பந்து வீச்சாளர் நூர் அகமது களத்திற்கு வந்த முதல் பந்தே சிக்ஸ் அடித்து பார்வையாளர்களுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால் அவரால் வெற்றியுடன் முடிக்க முடியவில்லை. 3 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற கட்டத்தில், நூர் அகமது 2 ரன்கள் எடுக்க முயன்று மறுபக்கம் இருந்த ஃபசல்ஹாக் ஃபரூக்கி ரன் அவுட் ஆனார். இதனால் 1 ரன் மட்டுமே கிடைத்ததால் போட்டி டிராவானது.
சூப்பர் ஓவருக்கு சென்ற நிலையில், ஆப்கானிஸ்தான் 17 ரன்கள் அடித்தது. ஆனால் அதனை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி 17 ரன்கள் அடித்து சூப்பர் ஓவரையும் டிரா செய்தது. இதனால் போட்டி இரண்டாவது சூப்பர் ஓவருக்கு சென்றது.
இரண்டு சூப்பர் ஓவர்கள்
இரண்டாவது சூப்பர் ஓவரை அஸ்மதுல்லா உமர்சாய் வீசினார். அவர் யாக்கர் வைக்க முயன்று இரண்டு பந்துகள் ஃபுல் டாஸாக சென்ற நிலையில், அதனை டேவிட் மில்லர் மைதானத்திற்கு வெளியே அனுப்பி சிக்ஸர் ஆக்கினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 23 ரன்கள் குவித்தது. இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தான் அணி மிகப்பெரிய தவரை செய்தது.
அதாவது நபி மற்றும் உமர்சாய்யை அனுப்பினர். சூப்பர் ஓவருக்கு முன்பாக இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியபோதே அவர் 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே அடித்தார். அப்படி இருக்கையில் நபியை இறக்கியது ஆப்கானிஸ்தான் செய்த தவறு. இன்னொரு புறம் பார்த்தால், குர்பாஸ் நல்ல ஃபார்மில் இருந்தார். ஆனால் அவரை களமிறக்கவில்லை. அவரை களமிறக்காதது தவறு என்று நபி ஆட்டமிழந்த பின் களத்திற்கு வந்த அவர் சுட்டிக்காட்டினார்.
ஆப்கானிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறு
நபி ஆட்டமிழந்தபோது 4 பந்துகளில் 24 ரன்கள் அதாவது 4 சிக்சர்கள் தேவையாக இருந்தது. பார்வையாளர் இது எப்படி சாத்தியம் என நினைக்க, குர்பாஸ் அடுத்தடுத்து 3 பந்துகளில் சிக்ஸ் அடித்து அசத்தினார். அவர் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை பெற்று தருவார் என நினைத்த நிலையில், எதிர்பாராத விதமாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதலிலேயே குர்பாஸை களமிறக்கி இருந்தால், ஆப்கானிஸ்தானுக்கான வெற்றி உறுதியாகி இருக்கும். அவர்கள் செய்த பெரிய தவறே குர்பாஸை இறக்காமல் நபியை இறக்கியதுதான்.
வெளியேறிய ஆப்கானிஸ்தான்
தற்போது ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் வரும் இரண்டு போட்டிகளிலும் வென்றாலும் எந்த பயனும் இல்லை. அவர்கள் சூப்பர் 8 சுற்றுக்கு வர வேண்டும் என்றால், தென்னாப்பிரிக்கா அணியோ அல்லது நியூசிலாந்து அணியோ அவர்களது அடுத்த இரண்டு போட்டியிலும் தோற்க வேண்டும். அது நடக்க வாய்ப்பு குறைவே. அதனால் ஆப்கானிஸ்தான் அணி லீக் போட்டிகளுக்கு பின்னர் டி20 உலகக் கோப்பையை விட்டு வெளியேறுவது 99% உறூதியாகிவிட்டது.
About the Author
R Balaji