இந்திய அணி டி20 உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. அடுத்ததாக நமீபியா அணிக்கு எதிராக நாளை வியாழக்கிழமை டெல்லியில் விளையாட உள்ளனர். முதல் உலகக் கோப்பை போட்டியில் அபிஷேக் ஷர்மா முதல் பந்திலேயே 0 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இரண்டாவது போட்டியில் தனது அதிரடியை காட்டுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், அபிஷேக் சர்மாவிற்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Add Zee News as a Preferred Source
Setback to India as Abhishek Sharma is hospitalized due to stomach Infection. #T20WorldCup2026 pic.twitter.com/GC21jYsE5s
— chirag khetan (@chiragkhetan1) February 11, 2026
அபிஷேக் சர்மாவிற்கு என்ன ஆனது?
தற்போது வெளியாகி உள்ள தகவல்படி அபிஷேக் சர்மாவிற்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தொடர்ந்து காய்ச்சல் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கு எதிரான போட்டியிலும் காய்ச்சலுடன் தான் அபிஷேக் சர்மா களம் இறங்கினார் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. டெல்லியில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிக காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக நேற்று நடைபெற்ற பயிற்சியிலும் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
பயிற்சியாளர் சொன்ன தகவல்
இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் அபிஷேக் சர்மா குறித்து பேசுகையில், அவருக்கு வயிற்றில் சில பிரச்சனைகள் உள்ளது. அவர் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை. நமீபியா போட்டிக்கு இன்னும் நேரம் உள்ளதால் அவரது பங்கேற்பு குறித்து இப்போது சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு எதிரான போட்டியிலும் காய்ச்சலுடன் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா, முதல் பந்திலையே ஆட்டம் இழந்து வெளியேறி இருந்தார். அதன் பிறகு பீல்டிங் செய்யவும் அவர் வரவே இல்லை. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் தான் பீல்டிங் செய்தார். அதே போல போட்டி முடிந்த பிறகும் அவரை மைதானத்தில் காண முடியவில்லை. அப்போதே அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியா vs நமீபியா
நாளை நமீபியாவிற்கு எதிரான போட்டியில் அபிஷேக் ஷர்மா பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்களும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அபிஷேக் ஷர்மா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பு குணமடைந்து விடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். மறுபுறம் பும்ராவும் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.
About the Author
RK Spark