படுகுஷியில் மும்பை இந்தியன்ஸ்… குழப்பத்தில் CSK – டி20 உலகக் கோப்பையில் யார் பெஸ்ட்?

ICC T20 World 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் இத்தொடர் நடைபெற்று வருகிறது. மார்ச் 8ஆம் தேதி இத்தொடர் நடைபெற இருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

இதை தொடர்ந்து, மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. மே மாதம் வரை ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம்தான் நிறைவடைந்தது. இதனால் ஒவ்வொரு அணிகளும் புதுப்பொலிவை பெற்றிருக்கின்றன. 10 ஐபிஎல் அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பெரும்பாலனவர்கள் டி20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாடுகிறார்கள். இத்தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் தங்கள் அணியின் வீரர்களை, அந்த அணியும் அணியின் ரசிகர்களும் அதிகம் உற்றுநோக்குகிறார்கள்.

சிஎஸ்கே மற்றும் மும்பை மீது பெரும் அழுத்தம்

அதிலும் குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் தங்களின் வீரர்களை அதிகம் உற்றுநோக்குகிறார்கள். அதுவும் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்திலும், மும்பை வான்கெடே மைதானத்திலும் நடைபெறுவது கூடுதல் சிறப்பு. சிஎஸ்கே அணியும், மும்பை அணியும் தலா 5 முறை கோப்பையை வென்றிருந்தாலும் தற்போதைய சூழலில் இரு அணிகளின் மீதும் பெரும் அழுத்தம் இருக்கிறது.

சிஎஸ்கே அணி, தோனிக்கு பின் கோப்பையை வென்றுகொடுக்கப்போவது யார்? என்ற கேள்வியை நோக்கி பயணிக்கிறது. இந்த சீசனில் அதற்கான விடையை ருதுராஜ் பூர்த்தி செய்யலாம், கோட்டையும் விடலாம். எனவே, சிஎஸ்கே அடுத்து கோப்பையை வெல்லும் வரை இந்த அழுத்தம் குறையப்போவதில்லை. 2023இல் தோனி தலைமையில் சிஎஸ்கே கோப்பையை வென்றது. 2024இல் 5வது இடத்திலும், 2025இல் 10வது இடத்திலும் நிறைவு செய்துள்ளது. மும்பை அணியோ 2020ஆம் ஆண்டுக்கு பிறகு 5 சீசன்களாக கோப்பையை வெல்லாமல் இருப்பதால் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் அதிக அழுத்தம் நீடிக்கிறது.

டி20 உலகக் கோப்பையில் விளையாடும் CSK, MI வீரர்கள்

சிஎஸ்கே அணியில் தற்போது இடம்பெற்றுள்ள சஞ்சு சாம்சன், சிவம் தூபே, டெவால்ட் பிரெவிஸ், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, நாதன் எல்லிஸ், அகேல் ஹொசைன், மேட் ஹென்றி உள்ளிட்ட  8 வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் விளையாடி வருகிறார்கள். மும்பையில் அணியிலோ சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, குவின்டன் டி காக், ரியான் ரிக்கல்டன், ஷெர்ஃபேன் ரூதர்போர்ட், மிட்செல் சான்ட்னர், கார்பின் பாஷ், வில் ஜாக்ஸ் உள்ளிட்ட 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சிஎஸ்கே வீரர்களின் நிலைமை என்ன?

முதலில் சிஎஸ்கே அணி குறித்து பார்ப்போம். சஞ்சு சாம்சனுக்கு தற்போது இந்திய அணியில் இடமில்லை. தூபே முதல் போட்டியில் சோபிக்காவிட்டாலும் அவர் இந்திய அணியின் தூணாக உள்ளார். பிரெவிஸ் கனடாவுக்கு எதிராக 6 ரன்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 23 ரன்களை மட்டுமே எடுத்தார். சூப்பர் ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். ஜேமி ஓவர்டன் நேபாள் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடவில்லை. 2வது போட்டியில் பௌலிங்கில் 2 விக்கெட்டை எடுத்து 33 ரன்களை எடுத்தார், பேட்டிங்கில் 5 ரன்களை மட்டுமே அடித்தார். நூர் அகமது நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடவில்லை, தென்னாப்பிரிக்கா உடனான 2வது போட்டியில் விளையாடி 3 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 35 ரன்களை கொடுத்தார், பேட்டிங்கில் அதிரடியாக 15 ரன்களை குவித்தார். 

மேட் ஹென்றி 2 போட்டிகளில் 3 விக்கெட், அகேல் ஹொசைன் 2 போட்டிகளில் 1 விக்கெட் எடுத்துள்ளார். நாதன் எல்லிஸ் அயர்லாந்து அணிக்கு எதிராக 4 ஓவர்கள் பந்துவீசி 12 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்துள்ளார். சிஎஸ்கே அணியில் மேட் ஹென்றி, நாதன் எல்லிஸ் ஆகியோரை தவிர்த்து வேறு யாரும் இன்னும் பெரியளவில் சோபிக்கவில்லை. அதுவும் குறிப்பாக பிரெவிஸ் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் தொடர்ந்து சொதப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். SA20 தொடரில் சிறப்பாக விளையாடினாலும் இந்தியாவில் நடந்த டி20ஐ தொடர்களிலும், டி20 உலகக் கோப்பையில் கடந்த 2 போட்டிகளிலும் பெரிதாக சோபிக்காதது சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் யார் யார் பிளேயிங் லெவனில் விளையாடப்போகிறார்கள் என்பதும் பெரிய கேள்விகுறியாக உள்ளது.

மிரட்டும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்

ஆனால், அதேநேரத்தில் மும்பை அணி பலமாக உள்ளது. சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, பும்ரா, திலக் வர்மா ஆகியோர் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். குவின்டன் டி காக் மற்றும் ரியான் ரிக்கல்டன் இருவருமே சிறப்பான பார்மில் இருக்கிறார்கள். அதுவும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது சிறப்பான ஒன்றாகும். 

வில் ஜாக்ஸ் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றார், மேற்கு இந்திய தீவுகள் போட்டியில் கடுமையாக சொதப்பியிருக்கிறார். சான்ட்னர் இன்னும் பெரிதாக சோபிக்கவில்லை. பாஷ் ஆப்கான் போட்டியில் மட்டும் விளையாடி 1 விக்கெட்டை எடுத்தார். ரூதர்போர்ட் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார், இங்கிலாந்து அணிக்கு எதிராக வான்கெடே மைதானத்தில் 76* ரன்களை குவித்ததும் கவனிக்கப்படுகிறது. அந்த வகையில், சிஎஸ்கே அணியை விட மும்பை இந்தியன்ஸ் அணி மகிழ்ச்சியில் உள்ளது. 

மேலும் படிக்க | இங்கிலாந்து படுதோல்வி… 2026 டி20 உலகக் கோப்பையில் முதல் அப்செட் – புள்ளிப்பட்டியல் அப்டேட்

மேலும் படிக்க | காயம் காரணமாக விலகிய வீரர்கள் யார் யார்…? லிஸ்ட் பெருசா போகுதே!

 

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.