South Africa vs Afghanistan, ICC T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த பிப். 7ஆம் தேதி தொடங்கியது. இந்தியா, இலங்கையில் நடைபெறும் இத்தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
Add Zee News as a Preferred Source
SA vs AFG: 188 ரன்கள் இலக்கு
அந்த வகையில், தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷீத் கான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டை இழந்து 187 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 61, குவின்டன் டி காக் 59 ரன்களை அடித்தனர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 3 விக்கெட்டையும், ரஷீத் கான் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
SA vs AFG: பவர்பிளேவில் மிரட்டிய குர்பாஸ்
188 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி, முதல் 4 ஓவர்களில் 50 ரன்களை குவித்தது. குர்பாஸ் அகமது அதில் பெரும்பான்மையான ரன்களை குவித்தார். ஆனால் அடுத்த 2 ஓவர்களில் ஆப்கான் அணி சறுக்கலை சந்தித்தது. அடுத்த 2 ஓவர்களை முறையே இங்கிடி, ரபாடா ஆகியோர் வீசினர். இங்கிடி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் எடுக்க, ரபாடா ஓவரிலும் ஒரு விக்கெட் சரிந்தது. இதனால் 6 ஓவர்களில் 56 ரன்களை எடுத்த ஆப்கான் அணி 3 விக்கெட்டை இழந்தது.
SA vs AFG: விக்கெட்டை விட்டு சொதப்பிய ஆப்கான்
அடுத்து அதிரடியாக ரன்கள் வந்தாலும், ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டையும் இழந்து வந்தது. குர்பாஸ் 42 பந்துகளில் 7 சிக்ஸர், 4 பவுண்டரி என 84 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஓமர்ஸாய் 22, ரஷீத் கான் 20 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர். 10வது வீரராக களமிறங்கிய நூர் அகமதும் சிக்ஸரை அடித்து பரபரப்பை கிளப்பினார்.
SA vs AFG: பரபரப்பான 50வது ஓவர்
கடைசி ஓவரில் ஆப்கான் அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது, 1 விக்கெட் மட்டுமே கையில் இருந்தது. ரபாடா வீசிய கடைசி ஓவரில் நூர் அகமது கேட்ச் கொடுத்தார், ஆனால் அந்த பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. நூர் அகமது மீண்டும் ஒரு வாய்ப்பை பெற்றார். Free Hit பந்து வைடாக வீசப்பட்டது. மீண்டும் முதல் பந்து வீசப்பட்டு பந்து டாட் ஆக முடிந்தது. அதேநேரத்தில் 2வது பந்தில் சிக்ஸர் அடித்தார். தொடர்ந்து 3வது பந்தில் 2 ரன்கள் அடிக்க, அந்த பந்தும் நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஆப்கான் அணி 3 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்தில் 2 ரன்னுக்கு ஆசைப்பட்டு நூர் – பசல்ஹக் பரூக்கி ஜோடி ஓடியது. ஆனால், இரண்டாவது ரன் ஓடும்போது பரூக்கி ஆட்டமிழந்தார்.
SA vs AFG: டையில் முடிந்த முதல் சூப்பர் ஓவர்
இதனால், போட்டி டை ஆனது. சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்காவுக்கு 18 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, தென்னாப்பிரிக்க 17 ரன்களை அடித்து சூப்பர் ஓவரும் டை ஆனது. முதல் பந்தில் மில்லர் 1 ரன் அடிக்க, 2வது பந்தில் பிரெவிஸ் சிக்ஸர் அடித்து மிரட்டினார். 3வது பந்தில் பிரெவிஸ் ஆட்டமிழக்க, 4வது பந்தில் ஸ்டப்ஸ் பவுண்டரி அடித்தார். 5வது பந்து டாட் ஆனது. இதனால் கடைசி பந்துக்கு 7 ரன்கள் தேவைப்பட, ஸ்டப்ஸ் சிக்ஸர் அடித்து மிரட்டினார்.
SA vs AFG: 2வது சூப்பர் ஓவர் – 24 ரன்கள் இலக்கு
இரண்டாவது சூப்பர் ஓவர் அடிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. ஸ்டப்ஸ் – மில்லர் ஜோடி களமிறங்கியது. இந்த ஓவரை அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் வீசினார். முதல் பந்தில் ஸ்டப்ஸ் சிக்ஸ் அடிக்க, 2வது பந்தில் சிங்கிள் அடித்தார். மூன்றாவது பந்தில் 2 ரன்கள் அடிக்க, மில்லர் அடுத்தடுத்த பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். கடைசி பந்தில் 2 ரன்களை மில்லர் அடித்தார். ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது.
SA vs AFG: நபியால் தோற்ற ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் நபி மற்றும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் களமிறங்கினார், கேசவ் மகாராஜ் பந்துவீசினார். முதல் பந்து டாட் ஆக, 2வது பந்தில் நபி ஆட்டமிழந்தார். குர்பாஸ் களமிறங்க தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். அடுத்து வைட் பந்தை கேசவ் மகாராஜ் வீசியதால், கடைசி பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் குர்பாஸ் அகமது கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி 2வது சூப்பர் ஓவரில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றியின் அருகே வரை வந்த ஆப்கானிஸ்தான் அணி, 2வது சூப்பர் ஓவரில் முகமது நபியை முதலில் பேட்டிங் செய்ய களமிறக்கி பெரிய தவறை செய்துவிட்டது. முதல் இரண்டு பந்துகளில் ரன்னும் வரவில்லை, விக்கெட்டும் விழுந்தது ஆப்கானிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இங்கிடி 3 விக்கெட்டை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
SA vs AFG: வெளியேறும் ஆப்கானிஸ்தான்?
ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில இன்றைய ஆப்கானிஸ்தான் – தென்னாப்பிரிக்கா போட்டி நிச்சயம் மறக்கமுடியாத மற்றும் தலைசிறந்த போட்டியாக பார்க்கப்படும். அழுத்தம் நிறைந்த போட்டியில் கடைசி வரை ஆப்கானிஸ்தான் அணி போராடியது, அதிலும் குர்பாஸ் அகமது தனது உயிரைக் கொடுத்து விளையாடியும் அந்த அணி தோல்வியை தழுவியது ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த நிலையில், இன்று தென்னாப்பிரிக்கா உடனும் தோல்வியடைந்ததால் குரூப் சுற்றுடன் ஆப்கானிஸ்தான் வெளியேறும் சூழல் உருவாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட சூப்பர் 8 சுற்றுக்கு வரும் வாய்ப்பு 1% தான் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் தென்னாப்பிரிக்காவையோ, கனடா அணி நியூசிலாந்தையோ வீழ்த்தினால் மட்டுமே ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்புண்டு.
மேலும் படிக்க | IND vs NAM: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்.. 2 மாற்றங்கள்! முக்கிய அதிரடி வீரர் விலகல்
மேலும் படிக்க | IND vs PAK போட்டியின் போது வீரர்கள் கைகுலுக்குவார்களா? ICC-PCB கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More