India vs Pakistan 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் நடைபெற்று வருகிறது. பிப். 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் மார்ச் 8ஆம் தேதி இத்தொடர் நடைபெறும்.
Add Zee News as a Preferred Source
இந்திய அணி இம்முறை ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி ஏற்கெனவே அமெரிக்க அணியுடன் மோதி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்து நாளை (பிப். 12) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நமீபியா அணியை எதிர்கொள்கிறது.
இந்திய அணியின் பிளேயிங் 11 மாற்றம்
கடந்த போட்டியில் பும்ரா வைரல் காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. இதனால், அவருக்கு பதில் சிராஜ் பிளேயிங் லெவனில் இடம்பெற்று, 3 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் தற்போது ஸ்குவாடுடன் இணைந்துள்ளார். நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா களமிறக்கப்படலாம். அடுத்து வரும் பிப். 15ஆம் தேதி அன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா கண்டிப்பாக விளையாடுவார் என்பதால் அதற்கு முன் ஒரு போட்டியில் அவரை விளையாட வைக்க இந்தியா திட்டமிடும்.
மேலும், கடந்த போட்டியில் கோல்டன் டக்அவுட்டான அபிஷேக் சர்மாவுக்கும் வயிறு வலி இருப்பதால் அவருக்கு பதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என The Indian Express செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில், நமீபியா அணிக்கு எதிரான நாளைய போட்டியில் அபிஷேக் சர்மா, சிராஜ் ஆகியோருக்கு பதில் சஞ்சு சாம்சன், பும்ரா பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம்.
பெரிய பிரேமதாசா மைதானம்
இது ஒருபுறம் இருக்க, பிப். 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதுதான் தற்போது இந்திய ரசிகர்களிடம் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இப்போட்டி இரவில் நடைபெற இருக்கிறது. பிரேமதாசா மைதானத்தில் பவுண்டரிகள், இந்திய மைதானங்களை ஒப்பிடும்போது சற்று பெரியதாகும். Deep Cover, Deep Mid-Wicket ஏறத்தாழ 78 மீட்டர் தூரம் இருக்கின்றன.
மெதுவான ஆடுகளம்
இந்திய பேட்டர்களுக்கு சிக்ஸர் அடிப்பதற்கு ஏதும் இது தடையில்லை என பொதுவாக கூறினாலும், ஆடுகளம் சற்று மெதுவாக இருக்கும். பிப். 8ஆம் தேதி இங்கு நடந்த இலங்கை – அயர்லாந்து போட்டியிலும் அதை பார்க்க முடிந்தது. இலங்கை – அயர்லாந்து போட்டியில் இலங்கை ஸ்பின்னர்கள் தீக்ஷனா மற்றும் ஹசரங்கா தலா 3 விக்கெட்டையும், வெல்லாலகே 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 143 ஆகவும், சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 128 ஆகவும் உள்ளது. பெரும்பாலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன என்றாலும் இங்கு ஸ்பின்னர்கள் அதிமுக்கியமானவர்கள்.
பாகிஸ்தானில் 5 பௌலர்கள்
இலங்கை மண்ணில் எப்போதுமே சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள். நேற்று கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி அப்ரார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், உஸ்மான் தாரிக், சயும் அயூப் என 5 ஸ்பின்னர்களை பயன்படுத்தியது. ஷாகின் அப்ரிடி மட்டுமே வேகப்பந்துவீச்சாளர் ஆவார், அவரும் 4 ஓவர்களில் 42 ரன்களை கொடுத்து கடைசி ஓவரில்தான் 1 விக்கெட்டை எடுத்தார். இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் இதே காம்பினேஷனை பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.
குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு
அந்த வகையில், தற்போது இந்திய அணியில் சிராஜ், அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே என நான்கு வேகப்பந்துவீச்சாளர்களும்; அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களே உள்ளனர். ஒரு சில பார்ட் டைம் ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள் என்றாலும் விக்கெட் எடுக்கும் அளவிற்கு அச்சுறுத்த கூடிய ஸ்பின்னர் பிளேயிங் லெவனில் தேவை.
ஐசிசி தரவுகளின்படி, இங்கு நடந்த 5 டி20 போட்டிகளில் ஸ்பின்னர்களின் எகானமி 6.5-க்கு கீழ் இருந்துள்ளது. மேலும், பிளேயிங் லெவனில் X Factor வீரர் தேவை. வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் இருமுனைகளில் இருந்து X Factor திறன் கொண்டு தாக்குதல் தொடுக்க வல்லவர்கள். இதனால், கொழும்புவில் குல்தீப் யாதவிற்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
ஏன் குல்தீப் யாதவ்?
சமீபத்திய போட்டியில் குல்தீப் யாதவ் பெரியளவில் ரிதமில் இல்லை, அதிக ரன்களை கொடுக்கிறார் என்றாலும் அவர் தொடர்ச்சியாக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக பந்துவீசி உள்ளார். மேலும் பிரேமதாசா போன்ற பெரிய மைதானங்கள் பெரியளவில் குல்தீப் யாதவின் பந்துவீச்சுக்கு பலம் அளிக்கும். மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக 3 டி20ஐ இன்னிங்ஸில் 8 விக்கெட்டையும், 6 ஓடிஐ இன்னிங்ஸில் 15 விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார், குல்தீப் யாதவ்.
காம்பினேஷனை மாற்ற வேண்டாம்
ஆசிய கோப்பை (டி20ஐ) இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்டை வீழ்த்தியிருந்தது நினைவுக்கூரத்தக்கது. இதனால், சிராஜிற்கு பதில் பும்ரா பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் நிலையில், அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில் குல்தீப் யாதவை விளையாட வைக்கலாம். மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள், மூன்று ஸ்பின்னர்கள், நம்பர் 8 வரை பேட்டர்கள் என காம்பினேஷனும் சரியாக இருக்கும்.
மேலும் படிக்க | IND vs PAK போட்டியின் போது வீரர்கள் கைகுலுக்குவார்களா? ICC-PCB கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு
மேலும் படிக்க | பல்டி அடித்த பாகிஸ்தான்! இந்தியாவுடன் டி20 உலக கோப்பை போட்டி! ஐசிசி உத்தரவு!
மேலும் படிக்க | IND vs PAK: இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் வீரர்.. முழு விவரம்!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More