டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய அணி அமெரிக்காவுக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாடி உள்ளது. அப்போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழலில், இன்று தனது இரண்டாவது போட்டியை நமீபியா அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
அபிஷேக் சர்மாவுக்கு உடல் நல பிரச்சனை
இந்திய அணியின் இப்போட்டியில் தொடக்க வீரராக அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அபிஷேக் சர்மா தீராத வயிற்று பிரச்சனை காரணமாக அவதிபட்டு வருகிறார். அவர் முதல் போட்டியிலேயே உடல் நல பிரச்சனை உடன் தான் விளையாடியதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார். இதனால் அவர் இப்போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்றும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறக்கப்படுகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் வினோத கருத்து
இந்த நிலையில், அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக களமிறக்க வேண்டாம் என்றும் வாஷிங்டன் சுந்தரை களமிறக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தரை தொடக்க வீரராக களமிறக்கலாம்
இது தொடர்பாக பேசிய கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த், நான் கேப்டனாக இருந்தால், காயத்தில் இருந்து மீண்டு வந்த வாஷிங்டன் சுந்தரை களமிறக்குவேன். பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக அவர் ஒரு போட்டியில் விளையாடுவது அவசியம். அபிஷேக் சர்மா விளையாடாத பட்சத்தில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை இறக்குவதை விட, வாஷிங்டன் சுந்தரை தொடக்க வீரராக இறக்கலாம்.
சஞ்சு சாம்சனுக்கு கடைசி வாய்ப்பு
பாகிஸ்தான் போட்டியின்போது, அபிஷேக் சர்மா அணிக்கு திரும்பினால், வாஷிங்டன் சுந்தரை 8வது இடத்தில் களமிறக்க வேண்டும். அதனால் ரிங்கு சிங்கை அணியில் இருந்து நீக்க வேண்டி இருக்கும். வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு போட்டியிலாவது விளையாடும் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அதேசமயம், அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் நிலையில், அவர் அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இது அவருக்கு ஒரு கடைசி வாய்ப்பாக கூட இருக்கலாம் என கூறி இருக்கிறார்.
கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் கூறிய இந்த கருத்து, ரசிகர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் சில ரசிகர்கள் அவரது கருத்தை ஆதரித்து வருகின்றனர். அதாவது, ஸ்ரீகாந்த் சொல்வது சற்று வினோதமாக இருந்தாலும், நமீபியா போன்ற சிறிய அணிக்கு எதிராக அதனை முயற்சித்து பார்க்கலாம் என கூறுகின்றனர்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
About the Author
R Balaji