இதுதான் என்னுடைய ஒரே இலக்கு.. அதுவரை கிரிக்கெட்டை விட்டு செல்ல மாட்டேன் – ரோகித் சர்மா!

Rohit Sharma Latest News: இந்திய அணியின் மூத்த வீரரும் முன்னாள் கேப்டனுமான ரோகித் சர்மா, கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை அவரது தலைமையில் வென்றவுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரோகித் சர்மா திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Add Zee News as a Preferred Source

இந்த சூழலில், ரோகித் சர்மா தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். வரும் 2027ல் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை வரை இந்திய அணியில் நீட்டிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். அத்தொடருக்கு பின்னர் அவர் முழுமையாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நல்ல ஃபார்மில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து வரும் அவர் அந்த ஃபார்மை தொடர்ந்து வைத்திருக்க கடுமையாக உழைத்து வருகிறார். 

2027 உலகக் கோப்பையை வெல்வதே ஒரே இலக்கு 

இந்த நிலையில், 2027 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதே தனது ஒரே இலக்கு என ரோகித் சர்மா உருக்கமாக பேசி இருக்கிறார். 

இது தொடர்பாக அவர் பேசுகையில், ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை பார்த்தே வளர்ந்தவன் நான். என்னுடைய ஆரம்ப கட்டத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், டி20 உலகக் கோப்பை தொடர், ஐபிஎல் தொடர் என எதுவும் கிடையாது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் தொடரே கிரிக்கெட்டில் உச்சமாக இருந்தது. எனவே அதனை வெல்லாமல் நான் ஓய்வை அறிவிக்க மாட்டேன். 

அதனால், 2027 உலகக் கோப்பையில் என்னால் முடிந்த அனைத்து உழைப்பையும் போட்டு அத்தொடரை வெல்ல விரும்புகிறேன். அதுவரை ஓய்வை பெற மாட்டேன் என ரோகித் சர்மா கூறி உள்ளார். 

2023 உலகக் கோப்பையில் இறுதி போட்டி வரை சென்ற இந்தியா 

இந்திய ஒருநாள் அணியை தற்போது சுப்மன் கில் வழிநடத்தினாலும், சில மாதஙக்ளுக்கு முன்பு வரை ரோகித் சர்மாவே கேப்டனாக இருந்தார். அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பையை எதிர்கொண்ட இந்திய அணி அத்தொடரின் இறுதி போட்டியை வரை சென்றது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தொடரை ஆஸ்திரேலியா வென்றது. இது இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இருக்கும்போதே 2027 ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் காத்திருக்கின்றனர். 

இந்தியாவுக்காக 282 ஒருநாள் போட்டிகள் 

ரோகித் சர்மா, 2027 ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுவிட்டே கிரிக்கெட்டை விட்டு வெளியேறுவேன் என உருக்கமாக கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்திய அணிக்காக ரோகித் சர்மா, இதுவரை 282 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 33 சதங்கள் மற்றும் 61 அரைசதங்களுடன் 11,577 ரன்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.