Doctor Vikatan: இன்று வாழ்க்கையில் யாருக்குமே ஸ்ட்ரெஸ் என்பது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது. 50 வயதுக்கு முன் அடிக்கடி ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகிறவர்களுக்கு, பிற்காலத்தில் மறதி, மூளையின் செயல்திறன் குறைவது போன்றவை சீக்கிரமே பாதிக்கும் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா? மூளையை ஆக்டிவ்வாக வைத்திருக்க என்ன செய்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி

ஸ்ட்ரெஸ் என்பது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கக்கூடியது. அதன் தீவிரத்தைப் பலரும் உணர்வதே இல்லை. உடல்ரீதியாக ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவு உணர்வுரீதியாகவும் ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம்.
அதை ‘ஸ்ட்ரெஸ்ஃபிட்’ என்கிறோம். அப்படி இருந்தால்தான் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சவாலை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும் ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ முடியும்.
ஸ்ட்ரெஸ் அதிகமானால் சிந்தனை தொடங்கி, செரிமானம், இதய நலன் என எல்லாமே அதனால் பாதிக்கப்படும். பிற்காலத்தில் ஏற்படும் மறதிக்கும் அது காரணமாகலாம்.
மூளையின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையானது கொழுப்புச்சத்து. சிலர், அதீத ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, கொழுப்புச்சத்தை அறவே தவிர்ப்பார்கள். அது மூளைக்கு நல்லதில்லை. நல்ல கொழுப்பாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவதுதான் இதில் முக்கியமே.
அப்படிப் பார்த்தால் மீன், பாதாம் பருப்பு, அவகாடோ பழம், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் நல்ல கொழுப்பு இருக்கிறது. கொழுப்பே இல்லாத உணவுப்பழக்கத்தால் மூளையில் பாதிப்புகள் ஏற்படும்.
மூளை 75 சதவிகிதம் நீரால் ஆனது. நம்மில் பலரும் செய்கிற தவறு போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டியது அவசியம். ஆனால், பலரும் அந்த அளவுகூட குடிப்பதில்லை. அதுவும் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

உடற்பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறன் மேம்படும். மூளைக்கு அதிகபட்ச ஆக்ஸிஜன் உள்ள ரத்தம் போய்ச் சேரும். உடற்பயிற்சி செய்யும்போது ‘பிரெய்ன் டிரைவ்டு நியூரோட்ராபிக் ஃபேக்டர்’ என்ற பொருள் விடுவிக்கப்படும்.
அது ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நரம்பு செல்களைப் பழுது பார்க்கவும், புதிய செல்கள் உருவாகவும் உதவும். தூக்கமின்மை என்பது மெள்ள மெள்ள மூளையின் ஆரோக்கியத்தைச் சிதைக்கும் என்பதும் பலருக்குத் தெரிவதில்லை.
இளவயதில் தூக்கத்தின் அருமை தெரியாமல், அதைத் தவிர்ப்பவர்களுக்கு 60 ப்ளஸ் வயதில் அதன் விளைவு தெரியவரும். எனவே, இளவயதிலேயே இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், வயதான பிறகு மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.
நெகட்டிவ் சிந்தனைகளைத் தவிர்ப்பது, பாசிட்டிவ்வான அணுகுமுறை, எதிலும் கெட்டது தவிர்த்து நல்லதைப் பார்ப்பது, நன்றியோடு இருப்பது போன்ற குணங்களின் மூலம் ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைக்குப் பழக வேண்டியது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.