கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு போட்டி என்றால், அது இந்தியா – பாகிஸ்தான் போட்டி தான். நாளை பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கையில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலக கோப்பையில் மோத உள்ளன. இந்த போட்டி நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், பாகிஸ்தான் அணி விளையாடுவோம் என்று தெரிவித்தனர். இதன் காரணமாக இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டி நடப்பதில் மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கொழும்புவில் நாளை ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பலரும் சோகத்தில் உள்ளனர்.
Add Zee News as a Preferred Source
#INDvPAK match on Feb 15th!#T20WorldCup2026 pic.twitter.com/jYj8PY0XZt
— AJ (@Ayaanshjunnu) February 14, 2026
வானிலை மையம் தெரிவித்தது என்ன?
இலங்கையில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிப்ரவரி 15ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இதன் காரணமாக கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வானிலை மாற்றம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும் ஆர் பிரேமதாசா மைதானம் அமைந்துள்ள கெத்தாராம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மதியம் வேளையில் மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்புள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைக்கான வாய்ப்பு சற்று குறைவு என்றாலும், விட்டுவிட்டு மழை பெய்யக்கூடும் என்றும், இதனால் போட்டி நடப்பதில் தாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் எப்போதும் மழை குறுக்கீடு அதிகம் இருக்கும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டு வருகின்றனர். முழு மைதானத்தையும் மூடும் வகையில் கவர்கள் அங்கு உள்ளன. இதனால் மழை நின்ற 20 நிமிடங்களிலேயே போட்டியை நடத்த முடியும்.
இந்திய அணியில் காயங்கள்!
இந்திய அணி கடைசியாக நமீபியாவிற்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால், அபிஷேக் சர்மா விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அபிஷேக் ஷர்மா விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் போட்டி நடைபெறும் நாளில் தான் இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அபிஷேக் சர்மா இல்லை என்றால் சஞ்சு சாம்சன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. முதல் போட்டியில் இடம் பெறாத பும்ரா நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். அவரின் பந்துவீச்சு பாகிஸ்தான் அணிக்கு எதிராக முக்கியமான ஒன்றாக இருக்கும்.
மேலும் இலங்கை மைதானம் ஸ்பின்னர்களுக்கு அதிகம் உதவும் என்பதால் ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபேவின் பேட்டிங் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்று. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினால், மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை அடித்து ஆட இந்த இருவரும் முக்கியமானவர்களாக இருப்பார்கள். அதே சமயம் இந்திய அணி கூடுதல் ஸ்பின்னரை களமிறக்க அதிக வாய்ப்பும் உள்ளது. அது குல்தீப் யாதவா அல்லது வாஷிங்டன் சுந்தரா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. பாகிஸ்தான் அணியும், இந்தியாவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
About the Author
RK Spark