இந்த ஆண்டிற்கான சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளன. லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்விற்காக தயாராகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் வைபவ் சூர்யவம்சியும் தேர்விற்கு தயாராகி வருகிறார். பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்க உள்ள சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொது தேர்வை வைபவ் சூர்யவம்சியும் எழுத உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள சம்ஸ்திபூரை சேர்ந்த வைபவ் சூர்யவம்சி பாட்னாவில் உள்ள போதார் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கியமான வீரராக வைபவ் சூர்யவம்சி இருந்தார். இறுதி போட்டியில் 175 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
Add Zee News as a Preferred Source

அசத்தி வரும் வைபவ் சூர்யவம்சி
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வைபவ் சூர்யவம்சி 1.10 கோடிக்கு வாங்க பட்டார். ஐபிஎல் வரலாற்றிலேயே 13 வயது வீரர் ஒரு அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தார் வைபவ் சூர்யவம்சி. மேலும் அதன் பிறகு இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியிருந்தாலும், தனது பள்ளி படிப்பை விட்டுவிடாமல் தற்போது தேர்விற்கு தயாராகி வருகிறார். இந்த தேர்வுகள் முடிந்த பின்பு ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சியில் வைபவ் சூர்யவம்சி இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி கட்டணம் எவ்வளவு?
வைபவ் சூர்யவம்சி படிக்கும் போதார் இன்டர்நேஷனல் பள்ளியின் கட்டண விவரங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான கல்வி கட்டணம் மட்டும் 93,840 ரூபாய் ஆகும். மேலும் சேர்க்க கட்டணமாக சுமார் 7,825 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மொத்தமாக ஒரு வருடத்திற்கான கட்டணமாக 1 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பள்ளி கட்டணமா என்று யோசித்தாலும், கோடிகளில் சம்பளம் ஆகும் வைபவ் சூர்யவம்சிக்கு இது மிகச் சிறிய தொகையாகும். தொடர்ந்து கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்தி வந்தாலும், படிப்பிலும் முக்கியத்துவம் கொடுக்கும் வைபவ் சூர்யவம்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பள்ளி நிர்வாகம் என்ன சொல்கிறது?
வைபவ் சூர்யவம்சி தேர்வு எழுதுவது குறித்து அந்த பள்ளியின் முதல்வர் கூறுகையில், “எங்கள் பள்ளி மாணவர் வைபவ் சூர்யவம்சி 10ம் வகுப்பு பொது தேர்வை எழுதுவது எங்களுக்கு பெருமையாக உள்ளது. அவருக்கு தேவையான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தாலும், தேர்வு அறையில் மற்ற மாணவர்களை போலவே நடத்தப்படுவார். அவருக்கு தனியாக எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படாது,” என்று தெரிவித்தார்.
வைபவ் சூர்யவம்சி கிரிக்கெட் பயணம்
வைபவ் சூர்யவம்சி தனது 12 வயதிலேயே பீகார் அணிக்காக ரஞ்சி கோப்பையில் அறிமுகமானார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் டெஸ்ட் போட்டியில், வெறும் 58 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். இப்போது ஐபிஎல் 2026ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்க காத்திருக்கிறார். மைதானத்தில் பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்கும் வைபவ் சூர்யவம்சி, பொது தேர்விலும் சதம் அடித்து வெற்றி பெற வேண்டும் என்று அவரது ரசிகர்களும் பள்ளி நிர்வாகமும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
About the Author
RK Spark